தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படுகிறது.
அவற்றை மக்கள் எளிதில் பெரும் வகையிலும், ஏதேனும் இன்னல் இருந்தால் அதை தீர்க்கும் வகையிலும், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் 'மக்கள் குறைதீர்வு முகாம்' நடத்தப்படும்.
இவை ஒவ்வொரு மாதமும் மக்களின் தேவையை கேட்டறிய நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இம்மாதத்திற்கான ரேஷன் கார்டு குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி கமிஷனர் அலுவலகங்களில் நாளை(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை பெறுதல், நகல் குடும்ப அட்டை பெறுதல் ஆகிய மனுக்களை மக்கள் பதிவு செய்துகொள்ளலாம்.
ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற நேரில் வர இயலாத மூத்தகுடிமக்களுக்கு அங்கீகார சான்று வழங்கப்படும்.
ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் எதாவது இருந்தால் அவற்றையும் பொதுமக்கள் இங்கு தெரிவிக்கலாம்.
மேற்கண்ட தகவல் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil