/indian-express-tamil/media/media_files/eZ3NdaMaOPgkHIK9XsNX.jpg)
ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் விரல்ரேகை சரிபார்ப்பு செய்யாதவர்கள் நீக்கம் செய்யப்படுவார்கள் என்பது தவறான தகவல். இதுவரை 63% குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைதாரர்கள் அவரவர்கள் வசதிக்கேற்ப விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு உணவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உணவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "06.02.2024 மற்றும் 07.02.2024 அன்று சில நாளேடுகளில், நியாய விலைக் கடைகளில் இன்றியமையாப் பண்டங்கள் பெறும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் சுயவிவரங்களை ஒரு வெள்ளைத் தாளில் அளிப்பதுடன் விரல் ரேகை சரிபார்ப்பை இம்மாத (பிப்ரவரி) இறுதிக்குள் மேற்கொள்ள வேண்டுமென்றும், அவ்வாறு மேற்கொள்ளாதவர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்படும் என்றும். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ன் படி, பொதுவிநியோகத் திட்ட தரவுகளில் ஏற்கனவே பதியப்பட்ட முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறின்றி இப்பணியினைச் செய்திட அறிவுறுத்தப்பட்டு அவர்கள் ஓய்வாக இருக்கும் போதோ அல்லது பொருள்கள் வாங்க கடைக்கு வரும்போதோ கைவிரல் ரேகைப் பதிவு மூலம் புதுப்பிக்கக் கூறப்பட்டு அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல்ரேகை சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது. அட்டைதாரர்களின் விவரங்கள் இதுவரை 63% குடும்ப சரிபார்க்கப்பட்டுள்ளன.
மீதியுள்ள அட்டைதாரர்களுக்கும் சரிபார்க்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது. குடும்ப அட்டைதாரர்கள் அவரவர்கள் வசதிக்கேற்ப விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இயலவில்லையெனில், இதற்கென தனி முகாம்கள் நடத்தவும், தேவைப்படின் வீட்டிற்கே சென்று புதுப்பித்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சில நாளிதழ்களில் குறிப்பிட்டிருப்பது போல் குடும்ப அட்டைகள் ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது என்றும், கைவிரல் ரேகைப் பதிவு செய்யாதவர்களின் பெயர்களும் நீக்கப்படாது என்றும், வெள்ளைத் தாளில் சுய விவரங்கள் ஏதும் தரவேண்டியதுமில்லை என்பதால், இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை" என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.