திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்த குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்று 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் வேட்பாளர்களைத் துளைத்து வருகின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதன்படி, தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்த திமுக அரசு, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் தெரிவித்தது.
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவதற்கான தகுதியான குடும்ப அட்டைதாரர்களின் பெயர்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நடந்து முடிந்த சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் தெரிவித்தார்.
வீட்டில் இருந்தபடியே ரேஷன் கார்டு அப்ளை செய்ய… வீடியோ!
இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி இடங்களைக் கைப்பற்ற வேண்டும் ஆளும் திமுக கூட்டணி கட்சிகளும் எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் ஆளூம் கட்சி வேட்பாளர்களிடம் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்று பொதுமக்கள் கேள்வி கேட்டு துளைத்து வருகின்றனர். அவர்களுக்கு, திமுக வேட்பாளர்கள் தமிழக அரசு தகுதியான குடும்ப அட்டைதாரர்களை அடையாளம் கண்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் வழங்கப்படும் என்று பதில் கூறி சமாளித்து வருகின்றனர். திமுக வேட்பாளர்கள், தலைவர்கள் பிரச்சாரத்துக்கு போகிற இடங்களில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்று மக்கள் கேள்வி எழுப்பி துளைப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே போல, அதிமுக வேட்பாளர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,500 தருவோம் என்று கூறினோம். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று திமுகவின் மீது மக்களின் கோபத்தை திருப்பி வருகின்றனர்.
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை இப்போது செயல்படுத்தலாம் என்றால் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தற்போது வழங்க முடியாது. ஆனால், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்காவிட்டால் அடுத்து வரும் தேர்தலில் மக்களை சந்திக்கும்போது மக்களின் கேள்விக் கணைகளை எதிர்கொள்ள முடியாது என்று திமுக அடிமட்ட நிர்வாகிகள் புலம்புவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் திமுக எம்பி கனிமொழி உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கனிமொழி பேசியதாவது: “உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக இருக்கக்கூடியவர்கள்… தமிழகத்தில் நடக்கும் திமுக ஆட்சி நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் பாராட்டக்கூடிய ஆட்சியாக திகழ்ந்து வருகிறது. ஸ்டாலின் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற சமயம், கொரோனாவின் பிடியில் நம் மாநிலம் சிக்கி கொண்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாத்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்புகூட ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கை வசதி பற்றாக்குறை இருந்தது. அதில் இருந்தும் விடுவித்து, பாதுகாப்பான ஒரு மாநிலமாக திமுக ஆட்சி உருவாக்கி உள்ளது. லாக்டவுன் அதிமுக ஆட்சியில் இதே கொரோனா பிரச்சனையால் முழு லாக்டவுன் போடப்பட்டது. அப்போது மக்கள் வேலைவாய்ப்பின்றி தவித்தனர். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 4 ஆயிரம் ரூபாய் வழங்கியது.
பெண்களுக்கு நகர்ப்புற பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் வசதியை தமிழக முதல்வர் கொண்டுவந்தார். சுயஉதவிக்குழு பெண்கள் திருமணத்துக்கு நிதியுதவி வழங்கியவர் கருணாநிதி.. பெண்களுக்கு சுய உதவிக்குழுக்களை உருவாக்கியவரும் கருணாநிதிதான். இலவச சமையல் அடுப்பு வழங்கியதும் கருணாநிதிதான். அவர் வழியில் திமுக தலைவர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
ஆட்சிக்கு வந்த 4 மாதத்துக்குள் ஆலங்குளத்தில் அரசு கலைக்கல்லூரிக்கு ரூ. 11 கோடி ஒதுக்கியது திமுக அரசு. பிரதிநிதிகள் இதே கடையம் பகுதியில் அறநிலையத்துறை சார்பில் ஒரு கல்லூரி அமைக்க ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்படி மக்களின் தேவைகள் என்னவென்பதை பார்த்து, அவைகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகள் என்பவர்கள், அரசு திட்டங்களை மக்களிடம் சேர்ப்பவர்கள்தான். நிர்வாகிகள் முதல்வரின் திட்டங்கள் மக்களின் வீட்டுக்கு வந்து சேர உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் மீது அரசு மீது கொண்டுள்ள அக்கறையை புரிந்துகொண்டு செயல்படுபவர்களாக இருக்க வேண்டும். அரசின் திட்டங்கள் தடையின்றி மக்களை சென்றடைய திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள். திமுக கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற நிர்வாகிகள் பாடுபட வேண்டும்” என்று கூறினார்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள சென்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் நிர்வாகிகள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: “திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை, தேர்தல் நேரத்தில் அளித்த அறிவிப்புகளும் நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்களை முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டினார். தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றியது திமுக என்றும் முதியோர் உட்பட அனைவரையும் ஏமாற்றி, வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் காற்றில் பறக்க விட்டுவிட்டதாகவும் அவர் சாடினார்.
பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு அதிக இழப்பீட்டை பெற்றுத்தந்தது அதிமுக அரசு என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு சங்கத்தில் பெற்ற நகைக்கடன், மகளிர் சுய உதவி குழு கடன்களை தள்ளுபடி செய்யாமல் திமுக ஏமாற்றுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இதனிடையே, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை தமிழகத்தில் உள்ள எந்தெந்த பிரிவு ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் என்பதை தமிழக அரசு எப்போதும் தெளிவுபடுத்தும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
பொதுவிநியோக திட்டத்தின் கீழ் 5 வகையான குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 112 குடும்ப அட்டைகள் இருக்கின்றன.
அவற்றில் PHH – NPHH என மொத்தம் 1 கோடியே 86 லட்சத்து 8 ஆயிரத்து 59 குடும்ப அட்டைகளும், வறுமையிலும் வறுமை (AAY) 18,63,077 குடும்ப அட்டைகளும், 8491 அன்னபூர்ணா (pds) குடும்ப அட்டைகளும், முதியோர் (oap) குடும்ப அட்டைகள் 4,01,045 குடும்ப அட்டைகளும் காவலர் குடும்ப அட்டைகள் (nphh) 59271 குடும்பை அட்டைகளும் உள்ளன.
மேற்கண்ட வகை குடும்ப அட்டைகளில் அரசின் கூடுதல் சலுகைகளும் மாறுபட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதில் வறுமையிலும் வறுமை (AAY) அட்டை தாரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
AAY ரேஷன் கார்டு குறிப்பாக நிலையான வருமானம் இல்லாத நபர்களுக்கு வழங்கப்படுகிறது. வேலையில்லாதவர்கள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் இந்த பிரிவின் கீழ் வருகிறார்கள். இந்த அட்டைதாரர்கள் ஒரு குடும்பத்திற்கு மாதம் 35 கிலோ உணவு தானியங்களைப் பெற தகுதியுடையவர்கள். அவர்கள் அரிசிக்கு ரூ .3, கோதுமைக்கு ரூ .2 என்றமானிய விலையில் உணவு தானியங்களைப் பெறுகிறார்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகையை பெரும் நோக்கில் புதிதாக திருமணமானவர்கள் பலரும் பழைய ரேஷன் அட்டையில் இருந்து பெயரை நீக்கிவிட்டு புதிதாக ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்து வருகின்றனர். இதனால், புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. இதனிடையே, தனி நபர் ரேஷன் கார்டுக்கு பொருட்கள் கிடைப்பதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.
மேலும், குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தனிநபர் ரேஷன் அட்டை தாரர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுதொடர்பாக அரசு எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. ரேஷன் கடையில் அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் தருவோம் என்ற திட்டத்தை குறித்து விசாரித்தபோது கொண்டைகடலை கொடுத்த கார்டுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் கொண்டைகடலை போடாத கார்டுக்கு இல்லை என்று கூறியதாக அண்மையில் செய்திகள் வந்தன.
அதாவது, (NPHH) அட்டை தாரர்களுக்கு உரிமைத்தொகை இல்லையென்று என்றும் வதந்திகள் வந்தன. இந்நிலையில், ரேஷன் கார்டில் மோசடிகள் ஏற்படுவதை தடுக்க யார் யாருக்கு உரிமைத்தொகை கிடைக்கும் என்ற அறிவிப்பை அரசு முன்கூட்டி அறிவிக்க வாய்ப்பில்லை என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.