ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம் : ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 6ம் தேதி வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் கெடுபிடி அதிகரித்து வருவதாக ரேஷன் கடை ஊழியர்கள் புகார் கூறி வருகிறார்கள். சர்க்கரை, அரிசி அளவு குறைந்துள்ளதாக கூறி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், மலிவு விலை காய்கறி கடைகளில் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு ரேஷன் கடை ஊழியர்களிடமே பிடித்தம் செய்யப்படும் நிலையும் உள்ளது. இதுபோன்ற தொடர் கெடுபிடிகள் கூடாது என்று அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம், குடோன்களில் இருந்து கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்களின் எடை குறைவு, குடும்ப அட்டை தாரர்களுக்கு பொருட்கள் முழுமையாக வழங்குதல், பாக்கெட்டுகளில் அடைத்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் ஆகஸ்ட் 6ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.