தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அம்பேத்கர் எழுத்துகளை படிக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்றைய தினம் விக்கிரவாண்டி அடுத்த வி. சாலை பகுதியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள் குறித்து அதன் தலைவர் விஜய் விளக்கமளித்தார். குறிப்பாக, மதசார்பற்ற சமூக நீதியின் படி தவெக பயணிக்கும் எனவும், கொள்கை வழிகாட்டிகளாக பெரியார், அம்பேத்கர், காமராஜர் போன்றோர் விளங்குவதாகவும் விஜய் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விஜய்யின் மாநாடு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில். "பகவத் கீதையைப் படிப்பதோடு அதைப்பற்றி டாக்டர் அம்பேத்கர் எழுதியிருப்பதையும் படிக்க வேண்டும்
தனது கொள்கை வழிகாட்டிகளில் ஒருவராக புரட்சியாளர் அம்பேத்கரை திரு விஜய் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். மதச்சார்பின்மைதான் தனது கொள்கை என்று அறிவித்திருக்கும் விஜய், மாநாட்டு மேடையில் இந்து மதத்தின் குறியீடாக பகவத் கீதையையும், இஸ்லாம் மதத்தின் குறியீடாகக் குர்ஆனையும், கிறிஸ்தவ மதத்தின் குறியீடாக பைபிளையும் நினைவுப் பரிசாகப் பெற்றார்.
பகவத் கீதையைப் பற்றி அம்பேத்கர், ‘புரட்சியும் எதிர்ப் புரட்சியும்’ என்ற தனது நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்.
“ பௌத்தம் இந்த சமூகத்தில் தார்மீக மற்றும் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியது. மௌரியப் பேரரசர் அசோகர் புத்த மதத்தைத் தழுவியபோது, சமூகப் புரட்சி அரசியல் புரட்சியாக மாறியது. மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, பௌத்த மன்னர்களால் பாதிக்கப்பட்ட பிராமணர்கள், புஷ்யமித்ர சுங்கனின் தலைமையில் ஒரு எதிர்ப்புரட்சியைத் தொடங்கினார்கள். அந்த
எதிர்ப்புரட்சிதான் பிராமணியத்தை மீட்டெடுத்தது.பகவத் கீதை, இந்த எதிர்ப் புரட்சிக்குக் கருத்தியல் மற்றும் தார்மீக நியாயத்தை வழங்குவதற்காக இயற்றப்பட்டது” என்று தனது நூலில் அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார்.
திரு. விஜய் அவர்கள் பகவத் கீதையைப் படிப்பதோடு அதைப்பற்றி டாக்டர் அம்பேத்கர் எழுதியிருப்பதையும் படிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் அம்பேத்கரை சாரமற்ற வெற்றுக் குறியீடாகப் பயன்படுத்துவதில் போய் அது முடிந்துவிடும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
நேற்று நடைபெற்ற மாநாட்டில் பேசிய விஜய், திராவிட மாடல் என்ற பெயரில் மக்கள் விரோத அரசு நடைபெறுவதாக திமுகவை நேரடியாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், திமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகரான ரவிக்குமார், விஜய் அம்பேத்கர் எழுத்துகளை படிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். இச்சம்பவங்கள் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“