தமிழ்நாட்டில் வெள்ளப் பாதிப்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக தமிழக அரசுக்கு ரூ. 5,000 கோடி வழங்க கோரி விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
வி.சி.க-வைச் சேர்ந்த விழுப்புரம் தொகுதி எம்பி. ரவிக்குமார் இன்று (டிசம்பர் 6) கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார். கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீசில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:
“ ஐயா, விதி 197 இன் கீழ், 06/12/2023 அன்று உள்துறை அமைச்சர் அவர்களின் கவனத்தை பின்வரும் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தை நோக்கி ஈர்ப்பதற்காகவும், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இதுகுறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவும் கோரி இந்த நோட்டீசைத் தாக்கல் செய்கிறேன்:-
மிக்ஜாம் சூறாவளியின் தாக்கத்தால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையை ஒட்டி சூறாவளி நிலையாக மையம் கொண்டதால் நிலைமை மோசமானது. இரண்டு நாட்களாக இடைவிடாத மழை பெய்தது . கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக சென்னையில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் சென்னையில் சாலைகள் மற்றும் வடிகால் அமைப்புகளில் பெருமளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை ஒன்பது உயிர்கள் பலியாகியுள்ளன, புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மக்கள் உயரடுக்குக் கட்டடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். தெருக்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும் இயற்கைப் பேரழிவிற்கு சாட்சியாக நிற்கின்றன. வீடுகளிலும், வீதிகளிலும் நிறுத்தப்பட்டிருந்த கார்களும் வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சேதம் அடைந்துள்ளன. ராணுவ வீரர்களும், என்டிஆர்எப் வீரர்களும் படகுகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே, 11 லட்சம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், 9 மாவட்டங்களில் 61,666 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். பால் பாக்கெட்டுகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தமிழ்நாட்டுக்கு இடைக்கால நிவாரண நிதியாக 5000 கோடி ரூபாய் வழங்குமாறு ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிவாரணத்தை உடனடியாக வழங்குமாறும், பேரிடர் குறித்த முழுமையான மதிப்பீட்டை மேற்கொள்ள ஏதுவாக மத்திய குழுவை உடனடியாக சென்னைக்கு அனுப்புமாறும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“