/tamil-ie/media/media_files/uploads/2023/06/tmc-d-ravikumar.jpg)
ரவிக்குமார் எம்.பி.,
2021ஆம் ஆண்டுக்கான 'மகாத்மா காந்தி அமைதிப் பரிசை' கீதா பிரஸ் என்ற பதிப்பகத்துக்கு ஒன்றிய அரசின் கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதற்கு விழுப்புரத்தை சேர்ந்த எம்.பி., ரவிக்குமார், காந்தி வெறுப்பாளர்களுக்கு காந்தி பெயரில் பரிசு வழங்குவதா என்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதைப்பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியதாவது,"கீதா பிரஸ் என்ற பதிப்பகத்துக்கு 2021 ஆம் ஆண்டுக்கான ‘மகாத்மா காந்தி அமைதிப் பரிசு’ ஒன்றிய அரசின் கலாச்சார அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
1995 இல் உருவாக்கப்பட்ட இந்தப் பரிசு 1 கோடி ரூபாய் ரொக்கப் பரிசும், பட்டயமும் கொண்டது. இதற்குமுன் இந்தப் பரிசை நெல்சன் மண்டேலா, டெஸ்மாண்ட் டுட்டு உள்ளிட்ட 18 பேர் பெற்றுள்ளனர்.
12 கோடிக்கும் மேற்பட்ட பகவத் கீதை புத்தகங்களை அச்சிட்டுப் பரப்பியுள்ள இந்தப் பதிப்பகம் 1923 இல் துவக்கப்பட்டது. இந்த ஆண்டு (2023) அதன் நூற்றாண்டாகும்.
கீதா பிரஸ் பதிப்பகத்தின் நிறுவனர் ஜெய்தயாள் கோயங்கா, அந்தப் பதிப்பகம் வெளியிடும் கல்யாண் என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியர் பிரசாத் போதார் ஆகியோர் மகாத்மா காந்தியுடன் ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்தார்கள், என்றபோதிலும் கோயில் நுழைவு, தீண்டாமை ஒழிப்பு, மதச்சார்பின்மை குறித்த காந்தியின் கருத்துகளோடு அவர்கள் உடன்படவில்லை.
1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்ட 25,000-க்கும் மேற்பட்ட நபர்களில் பிரசாத் போதார் மற்றும் கீதா பிரஸ் நிறுவனர் ஜெய்தயாள் கோயங்கா ஆகியோரும் அடங்குவர். அத்தகைய பின்புலம் கொண்ட ஒரு நிறுவனத்துக்கு இந்தப் பரிசை அறிவித்திருப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல", என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.