அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் எப்படி இருக்கிறார் என்பது குறித்தும், தான் சிறையில் பட்ட சிரமங்கள் குறித்தும் தயாரிப்பாளரும் சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் பணமோசடி தொடர்பாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாதத்திற்கு மேல் சிறையில் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்தநிலையில், சிறையில் இருந்த போது தான் பட்ட கஷ்டங்களை எல்லாம் பிஹைண்ட்வுட்ஸ் ஓ2 என்ற யூடியூப் சேனலில் விவரித்துள்ளார். அந்தப் பேட்டியில், என் அம்மாவுக்கு பிறகு மகாலட்சுமிதான் எனக்கு கிடைத்த வரம். என்னிடம் இருந்து அவரை யாராலும் பிரிக்க முடியாது. என்னை கைது பண்ண போறாங்க என தெரிந்தவுடன், மகாலட்சுமி, எனது அம்மா உள்ளிட்ட மொத்த குடும்பமும் பயந்துவிட்டது. புழலுக்கு போகப்போறோம்னு தெரிஞ்சதும் எனக்கு என்ன பண்றதுனே தெரியலை. கதறிட்டேன்.
கைது செய்யப்பட்ட போது எங்கம்மாவும் மகாலட்சுமியும் எனக்கிட்ட எப்படி உட்காருவ, எப்படி எழுந்திருப்பே என அழுதுக்கிட்டே கேட்டுக்கிட்டு இருந்தாங்க. ஏன்னா நான் தரையில் உட்கார்ந்ததே கிடையாது.
ஜெயிலுக்கு போனதும் பெரிய கேட் திறந்து, உள்ளே மூடியதும் எனக்கு உதறிருச்சு. சோதனையின்போது, நான் டிராக் பேண்ட் அணிந்திருந்தேன். அதில் இருந்த நாடாவை உருவிவிட்டார்கள். சிறை கைதிகள் அந்த சிறிய பொருட்களை வைத்து கூட தங்களை துன்புறுத்தி கொள்ள கூடாது என்பதற்காக அவர்களுடைய கடமையை செய்தார்கள். அப்போதே நான் கூனி குறுகிவிட்டேன்.
பின்னர் உள்ளே அழைத்துச் சென்ற போது ஜெயலர் என்னுடைய மருத்துவ பரிசோதனையை கேட்டார். அதை போலீசார் எடுக்கவில்லை. உடனே ஜெயிலர் இப்போதே இவருக்கு வியத்துள்ளது. இப்பவே பிபி எடுத்தால் எகிறிதான் காண்பிக்கும். அதனால் சற்று நிதானப்படுத்தி எடுத்துக் கொண்டு வாருங்கள் என்றார். அதன்படி இரவு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்ற நான், அதிகாலை 4 மணிக்கு அழைத்து வரப்பட்டேன். இரவு லேட்டாக தான் படுத்தேன். காலையில் கண்விழித்து பார்த்தப்போது தான் புழல் ஜெயில் எவ்வளவு பெரியது என தெரிந்தது.
புழல் மருத்துவ வளாகத்தில் இருந்து கைதி அறைக்கு மாற்றப்பட்டபோது, அங்குள்ள ஹைடெக் கைதிகளை பார்த்து மிரண்டுட்டேன். எனக்கு ஒதுக்கப்பட்ட சிறைக்கு செல்ல ஒன்றரை கி.மீ. தூரம் நடந்தே அழைத்து சென்றார்கள். இதுவரை நான் அவ்வளவு தூரம் எல்லாம் நடந்ததே கிடையாது. ஒரு வழியாக நடந்து சென்று எனக்கான அறைக்குச் சென்றுவிட்டேன்.
ஒரு இடத்தில் அடைத்து வைப்பது இல்ல ஜெயில், ஒரு இடத்தில் நிம்மதி இல்லாமல் இருப்பது தான் ஜெயில். நகரத்தில் இருப்பது போல் தான் இருந்தது எனக்கு. நான் செத்துருவேனு நினைச்சேன். கீழே உட்கார, எழுந்திருக்க எனக்கு 3 பேர் தேவை. சிறைவாசிகள் உதவி பண்ணாங்க, ஒரு கட்டத்திற்கு மேல் உதவி கேட்க கஷ்டமாக இருந்ததால், தவழ்ந்தே போய் பாத்ரூம் போனேன். அடுத்து, சற்று வசதியான சிறைக்கு மாற்றப்போது சற்று நிம்மதி அடைந்தேன். சிறை போலீசார் அன்பால் கைதிகளை அடக்கி வச்சுருக்காங்க.
எல்லா பிரபலங்களுக்கும் சிறையில் எல்லாம் கிடைக்கும் என்பது உண்மையில்லை. செந்தில் பாலாஜி சார் உள்ள மெடிக்கல்ல தான் உட்கார்ந்து இருக்காரு. அவருக்கு என்னமோ புஹாரியில் இருந்து பிரியாணி வருது, இன்னொரு இடத்தில் இருந்து காஜூ கத்லி வருதுனு வெளிலேருந்து சொல்றாங்க. ஆனா எதுவும் உண்மையில்லை. நான் பார்த்தவரை ஜெயிலில் ரொம்ப எளிமையான வாழ்க்கையை தான் செந்தில் பாலாஜி வாழ்ந்துக்கிட்டு இருக்கார். உண்மையில் ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கார். ஜெயில்ல போடுற சாப்பாடு தான் சாப்பிடுகிறார். உப்புச் சப்பில்லாத உணவு தான் அவருக்கும் வழங்கப்படுகிறது.
என் தலைவன் டி.டி.எஃப் வாசன் சிறைக்குள் வந்ததும் ஜெயிலே கதறுது. குருநாதா இங்கயுமாங்கிற மாதிரி கையில் கட்டோட வந்தார். அவரை தனி சிறையில்தான் வச்சிருந்தாங்க. அங்கயும் போலீஸ்காரர்களை வா செல்லம், போ செல்லம் என சொல்லிகிட்டு இருக்காரு, பைக்கை எரிச்சிடணும்னு நீதிமன்றம் தீர்ப்பு சொன்னதும் உள்ளே இருக்கும் கைதிகள் எல்லாம் கோலாகலமா கொண்டாடுறாங்க, இவ்வாறு ரவீந்தர் சந்திரசேகரன் தெரிவித்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.