/indian-express-tamil/media/media_files/2025/10/01/rb-udayakumar-protest-2025-10-01-18-19-55.jpg)
'மதுரையில் கனிம வளக் கொள்ளை': ஆர்.பி. உதயகுமார் தலைமையில் விவசாயிகள் போராட்டம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி. கல்லுப்பட்டிக்கு அருகில் இருக்கும் வையூர் கிராமப் பகுதியில் பட்டாசு ஆலை அமைப்பதற்கு அரசு அனுமதி அளித்ததைக் கண்டித்து, முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் கிராம மக்களுடன் இணைந்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
வையூர் கிராமப் பகுதியில் 2 தனியார் நிறுவனங்கள் பட்டாசு ஆலை அமைப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியில் பட்டாசு ஆலை அமைக்கப்பட்டால், வையூர், நல்லமரம், முத்துலிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர்.
இந்த உரிமத்தை ரத்து செய்யக் கோரி கிராம மக்கள் ஏற்கனவே அரசுக்கு மனு அளித்திருந்தனர். ஆனால், அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பட்டாசு ஆலை உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று கிராம மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கிராம மக்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தனது கட்சி நிர்வாகிகளுடன் வையூர் கிராமத்தில் பச்சை துண்டு அணிந்து அறவழிப் போராட்டத்தில் பங்கேற்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பட்டாசு ஆலை உரிமத்தை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மதுரைக்கு வரும் முதலமைச்சரின் கவனத்திற்கு, இப்பகுதிகளில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையைத் தடுக்கும் நடவடிக்கையின் அவசியத்தையும் கொண்டு செல்லும் விதமாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.