/indian-express-tamil/media/media_files/2025/02/21/GFmYr8Wj1RvfC6numKSH.jpg)
முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், அ.தி.மு.க-விற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ள அக்கட்சி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அண்ணா, பெரியார் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தனது கருத்துகளை வீடியோ வடிவில் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ளார். அதில், "முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அரசியல் இல்லாத முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்ற அடிப்படையில் தான் பங்கேற்றோம். முருக பக்தர்கள் என்ற அடிப்படையில் மட்டும் தான் நாங்கள் கலந்து கொண்டோம்.
அந்த மாநாட்டில் அரசியல் இருக்காது என்று நம்பினோம். ஆனால், அங்கு ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் முன்னாள் முதலமைச்சர் அண்ணா, பெரியார் குறித்து அவதூறாக கருத்துகள் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக அ.தி.மு.க மீதும் அவதூறு பரப்பப்படுகிறது. அதனால், ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டி இருக்கிறது. கொள்கை, கோட்பாடு மற்றும் லட்சியங்களை ஒருபோதும் அ.தி.மு.க விட்டுக் கொடுக்காது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். குறிப்பாக, தி.மு.க-விற்கும் நன்றாக தெரியும்.
ஆனால், அ.தி.மு.க மீது அவதூறு பரப்புவதற்கு ஏதாவது காரணம் கிடைக்காதா என்ற வகையில் தான் தி.மு.க-வினர் செயல்படுகின்றனர். அண்ணா மற்றும் ஜெயலலிதா ஆகியோர் குறித்து அவதூறாக பேசிய காரணத்தினால், எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு செய்தார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.
அந்த முடிவை இந்த நேரத்தில் தி.மு.க-விற்கு நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம். தி.மு.க-வினர் போன்று அனைத்து விஷயங்களிலும் சமரசம் செய்து கொண்டு ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் நபர் எடப்பாடி பழனிசாமி கிடையாது.
முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், அ.தி.மு.க-விற்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. அவர்கள் என்ன நடைமுறையில் மாநாட்டை நடத்தினார்கள் என்று எங்களுக்கு தெரியாது.
அண்ணா, பெரியார் குறித்து அவதூறான வீடியோ ஒளிபரப்புவார்கள் என்று எங்களுக்கு தெரியாது. அந்த வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டதற்கு பின்புறம் நாங்கள் அமர்ந்திருந்தோம். ஆகவே, அந்த வீடியோவை நாங்கள் பார்க்கவில்லை.
எனினும், எந்த இடத்தில் பெரியார் மற்றும் அண்ணா குறித்து அவதூறு பரப்பினாலும் அதனை அ.தி.மு.க தட்டிக்கேட்கும். இத்தகைய கருத்துகளுக்கு என்றுமே எதிராக நிற்போம். ஆகையால், அந்த வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க தரப்பில் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.
அண்ணா குறித்து அவதூறு பரப்பினால், அதனை முதலாவதாக எதிர்த்து நிற்பது அ.தி.மு.க-வாக இருக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.