RB Udhayakumar prepares food with family for ADMK cadres in Madurai: தேனியில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துக்கொள்ளும் தொண்டர்களுக்கு தன் குடும்பத்துடன் சேர்ந்து உணவு சமைத்து விருந்து வைத்துள்ளார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்ததையடுத்து, பெரும் போராட்டத்திற்கு பின்னர், அ.தி.மு.க.,வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார் இ.பி.எஸ். இந்த போராட்டம் காரணமாக, அ.தி.மு.க.,வில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஒரு அணியும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு அணியும் உருவானது. ஒற்றை தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பி.எஸ் மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மறுபுறம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை நீக்குவதாக ஓ.பி.எஸ் அறிவித்தார்.
இதையும் படியுங்கள்: ஓ.பி.எஸ் இனி அனாதை; மத்திய அரசு எங்களை அங்கீகரித்து விட்டது: ஆர்.பி உதயகுமார்
இந்தநிலையில், தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்த அ.தி.மு.க திட்டமிட்டிருக்கிறது. இதில் ஓ.பி.எஸ்-இன் சொந்த மாவட்டமான தேனியில், ஓ.பி.எஸ்-க்கு பதிலாக எதிர்கட்சி துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, ஆர்.பி.உதயகுமார் தலைமையில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று திங்கட்கிழமை மதுரையில், மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பல்வேறு இடங்களில் இருந்து வந்து கட்சி தொண்டர்கள் கலந்துக் கொண்டனர். இந்த தொண்டர்கள் இன்று செவ்வாய்கிழமை தேனி மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக மதுரையில் தங்கியுள்ளனர்.
தேனியில் நடைபெற உள்ள ஆர்பாட்டத்தில், அதிக தொண்டர்களை கூட்டி, எடப்பாடியின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளார்.
இந்தநிலையில், மதுரையில் தங்கியுள்ள தொண்டர்களுக்கு நேற்று இரவு ஆர்.பி.உதயகுமார் தன் குடும்பத்துடன் சேர்ந்து, உணவு தயாரித்து வழங்கியுள்ளார். ஆர்.பி.உதயகுமார் தனது மனைவி மற்றும் மகளுடன் சேர்த்து புரோட்டா உள்ளிட்ட உணவுகளை தயாரித்து தொண்டர்களுக்கு விருந்து வைத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil