மதுரையில் நடைபெற்ற மகா பெரியவா ஜெயந்தி விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டார்.
அப்போது, "2021 முதல் இன்று வரை தமிழகத்தில் 7,000-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளன. மக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது. திரைப்படங்களை மிஞ்சும் வகையில் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பல்லடம், ஈரோடு, நாமக்கல் ஆகிய இடங்களில் தொடர்ந்து நடக்கும் கொலைகள் ஒரே கும்பலால் செய்யப்படுகின்றன என்ற தகவலுக்கு மத்தியிலும், உண்மையான குற்றவாளிகளை அரசு கைது செய்துள்ளதா? என்ற சந்தேகம் எழுகிறது.
தற்போதைய தி.மு.க. ஆட்சியின் போது பெண்கள், மாணவிகள், முதியோர் உள்ளிட்ட பலர் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். தாம்பரத்தில் 13 வயது சிறுமி மீது காவலாளி பாலியல் வன்கொடுமை நிகழ்த்திய சம்பவம், அண்ணா பல்கலைக்கழக மாணவி மற்றும் அரக்கோணத்தில் மாணவிகள் மீது நடந்த கொடுமைகள் போன்றவை அனைத்தும் தி.மு.க. ஆட்சியின் பொறுப்பற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
இன்று மாணவர்கள் அறிவின் அடிமையாக இல்லாமல் போதையின் அடிமையாகிவிட்டனர். மக்கள் நிச்சயம் மாற்றத்தை விரும்புகிறார்கள். 2026-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய ஆட்சி அமையும்; அதில் எந்தக் குழப்பமும் இல்லை" எனக் கூறினார்.