தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி, மற்றும் மக்கள்நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தமிழகம் முழுவதும் பரபரப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் மு.க ஸ்டாலின் ஆளுங்கட்சி மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் நிலையில், முக்கிய அமைச்சர்களின் தொகுதிகளில் கிராமசபை கூட்டத்தை நடத்தவும் தயாராகி வருகிறார்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் தமிழக ஆளுநரை சந்தித்த மு.க.ஸ்டாலின், அதிமுக அமைச்சர்களின் ஊழல் குறித்து ஆதாரங்களின் தொகுப்பை வழங்கியதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் ஆட்சியை கலைப்பதாற்காக ஸ்டாலின் வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறார் என தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, ஊழல் குறித்து என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து புஞ்சை புலிம்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிச்சாமி கூறுகையில், நான் முதல்வராக பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டு காலத்தில், ஸ்டாலின் ஆட்சியை கலைக்க பலமுறை முயற்சித்துள்ளார். ஆனால் அவரின் முயற்சிகளை மக்களின் துணையோடு தகர்த்தெரிந்து இந்தியாவிலேயே சிறப்பாக ஆட்சி கொடுத்து வருகிறோம். திமுகவில் வாரிசு அரசியல் நடைபெற்று வருகிறது. கருணாநிதி, அவரது மகன் முக ஸ்டாலின், அடுத்து அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அடுத்தடுத்து கட்சியில் அடித்தளம் அமைத்து வருகின்றனர்.
ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். இந் ஊழல் புகார் குறித்து என்னோடு விவாதிக்க தயாரா? எந்த துறையில் என்னென்ன ஊழல் நடந்துள்ளது. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் கூறுகிறேன். நான் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் கூறுங்கள் என்று தெரிவித்துள்ள முதல்வர், துண்டு சீட்டு இல்லாமல் கருத்து மோதலில் நேருக்கு நேர் விவாதம் நடத்த, ஸ்டாலின் தயாரா என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். அரசு டெண்டரே விடாத நிலையில், டெண்டர் மூலம் ஊழல் நடந்ததாக ஸ்டாலின் பேசுகிறார். இந்த ஆட்சியில் யார் வேண்டுமானாலும் இ-டெண்டர் மூலம் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் திமுக ஆட்சியில் குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே டெண்டர் வழங்கப்பட்டது.
இந்த ஆட்சியில் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் தான் பொய் புகார்களை கூறி வருகிறார். இந்திய நாட்டில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சிதான் அதனால் உங்களுக்கு ஊழலை பற்றிப் பேசுவதற்குத் தகுதி கிடையாது என தெரிவித்துள்ளார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் எப்போதும் தான் முதல்வராக ஆக வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருக்கிறார். முதல்வர் பதவி மீது இவ்வளவு வெறியோடு இருப்பவரிடம் ஆட்சியைக் கொடுத்தால் நாடு துண்டாகிவிடும் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.