சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிகிச்சை மருத்துவமனையில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
இந்த அரசு மருத்துவமனையில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 15 பேர் தீவிர சிகிச்சை பிரிவில், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு நேற்று மாலை ஏறத்தாழ 6:45 மணிக்கு ஏற்பட்ட மின் தடை இரவு 10 மணி வரை நீடித்தது.
மருத்துவமனைக்கு டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரத்தை கடத்தும் மின்கம்பி எரிந்ததால், மின் தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், ஜெனரேட்டர் வயர் எரிந்ததாலும் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து மின்சாரம் வழங்க முடியாத நிலை உருவானதாக தெரிகிறது. இதனால் நோயாளிகள் மற்றும் உடன் வந்திருந்தவர்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
எனினும், வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தவர்களுக்கு தனி ஜெனரேட்டர் மூலம் தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டதால், அந்த நோயாளிகளுக்கு பிரச்சனை ஏற்படவில்லை. இதையடுத்து, இரவு 10 மணியளவில் மின்சாரம் மீண்டும் விநியோகம் செய்யப்பட்டது.
முன்னதாக கிண்டி மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டதை அறிந்தவுடன் சுகாதாரத்துறை செயலர் சுப்ரியா சாகு சம்பவ இடத்துக்கு விரைந்தார். அவர், அனைத்து வார்டுகளில் உள்ள நோயாளிகள் மற்றும் உறவினர்களுடன் பேசியதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதேபோல், மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். "கிண்டி மருத்துவமனையில் மின்தடை சரி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, சென்று கொண்டிருக்கும் வயர் மூலம் மின்தடை சரி செய்யப்பட்டுள்ளது. எந்தவித மின்தடையும் இல்லாமல் பாதுகாப்பாக மருத்துவமனை இயங்கி வருகிறது. மருத்துவமனைக்கு மின்சாரம் வழங்கும் கேபிள் தரைக்கடியில் செல்கிறது. அந்த கேபிள் திடீரென்று வெடித்துள்ளது. மின்கம்பியில் தீப்பற்றியதால் மின்தடை ஏற்பட்டுள்ளது. உடனடியாக பொதுப்பணித்துறையினர் கேபிளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்'' என அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“