Vijayadharani | Tamilnadu Bjp: குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 3 முறை தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றவர் விஜயதரணி எம்.எல்.ஏ. இவர் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் உலா வந்தன. தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில், விஜயதரணி எம்.எல்.ஏ காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதாரணி பா.ஜ.க.வில் இணைந்தார். அவரது கழுத்தில் தாமரை படம் அச்சிடப்பட்ட காவி துண்டை அமைச்சர் எல். முருகன் அணிவித்தார். மலர் கொத்தையும் அவரது கையில் கொடுத்தார். இதனிடையே, விஜயதரணி எம்.எல்.ஏ தனது எக்ஸ் வலைதள பக்க பதிவில், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியதை உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, விஜயதரணி எம்.எல்.ஏ பிரதமர் மோடி சென்னையில் பங்கேற்கும் நிகழ்வில், அவரது முன்னிலையில் பா.ஜ.க-வில் சங்கமம் ஆகி, உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொள்ள போகிறார் என்று குமரியில் செய்திகள் பரவியது. இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலியில் இம்மாதம் 28ம் தேதி நடக்கும் கட்சி நிகழ்வில் பிரதமர் மோடியின் முன் பா.ஜ.க.வில் இணைகிறார் விஜயதரணி எம்.எல்.ஏ என்கிற செய்திகளும் வெளிவந்தன.
இதன்பிறகு, இன்று டெல்லியில் உள்ள பா.ஜ.க-வின் டெல்லி அலுவலகத்தில் தேசிய தலைவர் நட்டாவின் முன் பா.ஜ.க-வில் சேரப்போகிறார் விஜயதரணி எம்.எல்.ஏ என்றும் செய்திகள் நமக்கு கிடைத்தது. ஆனால், விஜயதரணி எம்.எல்.ஏ பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னனிலையில் பா.ஜ.க-வில் சேர்ந்தார். இந்த நிகழ்வின் போது, மத்திய இணை அமைச்சர் எல். முருகனுக்கு பூ கொத்து கொடுக்கும் நிழல் படத்தில் உடன் நிற்கும் மனிதர்கள் யார்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
விஜயதரணி எம்.எல்.ஏ பா.ஜ.க-வில் இணைந்தது குறித்து டெல்லி வட்டாரத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது, பா.ஜ.க-விடம் விஜயதரணி வைத்த கோரிக்கை, வரும் நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது தான். அவர் பா.ஜ.க-வின் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு வரும் என்பதாலே பா.ஜ.க தலைமை ஆலோசனை நடத்த தாமதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரது கோரிக்கை ஏற்கபட்டாலும், விஜயதரணி பா.ஜ.க-வில் இணையும் நிகழ்வில் தேசிய தலைவர் நட்டா பங்கேற்கும் சூழல் அமையவில்லை.
விளவங்கோடு தொகுதியில் போட்டி எப்படி?
2009 பொது தேர்தலுக்கு முந்தைய தேர்தல்களில் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியில் காம்யூனியஸ்ட் கட்சிக்கு ஒதுக்கிய தொகுதி தான் விளவங்கோடு. 2009-க்குப் பின்னர், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த தேர்தலில் காலம் சென்ற பொன்னப்ப நாடாரின் மகன் பொன். விஜயராகவன் தான் காங்கிரஸ் வேட்பாளர் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், மணிசங்கர் ஐயர் கோட்டாவில் விளவங்கோடு ஒதுக்கப்பட்டதும், அவரது பரிந்துரையில் விஜயதரணி போட்டியிட்டு முதல் வெற்றி பெற்றவர், தொடர்ந்து 3 முறை போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“