‘கலைஞரின் மூத்த பிள்ளை இப்படி தலை குனியலாமா?’ ஆதங்கத்தில் உடன்பிறப்புகள்

கருணாநிதி ஆக்டிவாக இருந்த வரை முரசொலியில் ஒரு எழுத்துப் பிழைகூட ஏற்பட அனுமதிக்க மாட்டார்.

நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து கடந்த அக்டோபர் 26-ம் தேதி முரசொலியில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. ரஜினியிடம் ஒரு ரசிகன் கேள்வி எழுப்பும் பாணியில் எழுதப்பட்டிருந்த அக்கட்டுரையில், ‘30, 40 வருடங்கள் திரையில் நடித்தது மட்டுமே முதல்வர் ஆவதற்கு தகுதி என நீ கருதும் போது, இத்தனை ஆண்டுகாலம் உன்னை உயர்த்திப் பிடித்த எங்களுக்கு அரசியலில் ஈடுபடத் தகுதி இல்லை என்பது எத்தகைய நியாயம் தலைவா?’ என வார்த்தைகளால் அர்ச்சித்திருந்தனர்.

செய்தி சேனல்களிலும், இணையத்திலும் விவாதப் பொருளாகிப் போன இக்கட்டுரை வெளிவந்தவுடன், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து நீக்கப்பட்ட கடலூர் மாவட்ட மன்ற நிர்வாகிகளை சந்தித்து ரஜினிகாந்த் உரையாடினார். ‘என்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது’ என்று அறிக்கையும் வெளியிட்டார்.

இந்நிலையில், அக்டோபர் 28-ம் தேதி வெளிவந்துள்ள முரசொலியில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து முரசொலியில் வெளிவந்த கட்டுரை சில நல்ல மனதை புண்படுத்துவதாக உள்ளதென்று கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இனி அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது’ என கட்டம் கட்டி செய்தி வெளியிட்டுள்ளனர்.

முரசொலி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இந்திரா காந்தி, மோடி என எத்தனையோ தலைவர்களை கடுமையாக விமர்சித்திருக்கிறது. சமீபத்தில் அ.தி.மு.க. 47வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது கூட, அக்கட்சியை விமர்சிப்பதாக கூறி எம்.ஜி.ஆரை புரட்டி எடுத்தார்கள். 1972-ல் அவர் அ.தி.மு.க.வை தொடங்கிய பின்னணி ரகசியங்களை வெளியிடுவோம் என்று சிலம்பம் சுற்றினார்கள். அதற்கெல்லாம் என்றும் வருத்தம் தெரிவித்ததில்லை. ரஜினி விஷயத்தில் மட்டும் தடாலடியாக சரண்டர் ஆகியிருப்பதன் பின்னணி குறித்து, தி.மு.க. வட்டாரங்களில் பேச்சுக் கொடுத்தோம்.

‘ரஜினி இதுவரையில் கட்சி தொடங்கவில்லை. தி.மு.க.வை குறிப்பிட்டு எங்கும் சீண்டவில்லை. அப்படியிருக்கையில் அவரை விமர்சித்து கட்டுரை எழுத வேண்டிய அவசியமென்ன? ரஜினியின் ரசிகர்களை சீண்டுவதற்காக எழுதப்பட்ட இக்கட்டுரை, ரஜினியை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது என்கிற கருத்தைத் தான் விதைத்துள்ளது.

சரி போகட்டும். எழுதிவிட்ட பின்பு அப்படியே விட்டுவிட வேண்டியது தானே. முரசொலியில் வந்த கட்டுரைக்கு அவரோ, அவரது மன்றத்தைச் சேர்ந்த சுதாகர், இளவரசன் போன்றவர்களோ எந்த எதிர்வினையும் ஆற்றாத போது, எதற்காக வருத்தம் தெரிவித்து செய்தி வெளியிட வேண்டும்? எதிரணியினரை விமர்சித்து முரசொலியில் வெளிவந்த எந்த செய்திக்கும் வருத்தம் தெரிவிப்பதை கலைஞர் கருணாநிதி இருந்தவரையில் அனுமதித்ததில்லை. இப்போது ரஜினிக்கு பயந்தது போல் ஆகிவிட்டது!’ என்றவர்களிடம், ‘இந்த திடீர் பல்டி எதற்காக?’ என்றோம்.

‘அந்த கட்டுரை வெளிவந்த பின்னர் தான் விஷயம் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு சென்றது. கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 2.0 வெளிவரவிருக்கிறது. இனி வரும் படங்களை சன் தயாரிப்பிலோ, உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் தயாரிப்பிலோ ரஜினி நடிக்கலாம். எனவே இந்த தருணத்தில் தேவையில்லாமல் ரஜினியை சீண்ட வேண்டாம் என தலைமை நினைத்திருக்கலாம். முரசொலியின் மேலாண் இயக்குநரான உதயநிதியும் கட்டுரை அச்சில் ஏறுவதற்கு முன்னர் பார்க்கவில்லை. இதனையடுத்து ரஜினியிடம் சமரசம் பேசியுள்ளனர். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. இதன் தொடர்ச்சியாகத் தான் சில நல்ல மனதை புண்படுத்திவிட்டோம் என அறிக்கை வந்திருக்கிறது’ என்றனர்.

பாராளுமன்றத் தேர்தலுக்காக மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கடந்த ஏப்ரல் 29-ம் தேதி மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது, மாநிலங்களவை எம்.பி. கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர். இச்சந்திப்பிற்கான படங்கள் அன்றே சமூக வலைதளங்களில் வைரலாகின.

ஆனால், அடுத்த நாள் வெளிவந்த முரசொலியில், கனிமொழியின் படம் மட்டும் வெட்டப்பட்டு செய்தி வந்தது. கனிமொழியின் ஆதரவாளர்கள் உடனடியாக முரசொலியின் ஆசிரியர் செல்வத்திற்கு விஷயத்தை தட்டிவிட, அவசர அவசரமாக கனிமொழியின் படத்துடன் புதிய பத்திரிக்கையை அடித்து விற்பனைக்கு விட்டனர். இணைய இதழிலும் போட்டோவை மாற்றினர்.

கருணாநிதி ஆக்டிவாக இருந்த வரை முரசொலியில் ஒரு எழுத்துப் பிழைகூட ஏற்பட அனுமதிக்க மாட்டார். இப்போது இப்படி படம் மாற்றுவதும், விமர்சித்துவிட்டு பின்னர் வருந்துவதும் சர்வசாதாரணமாக நடக்கிறது என்கிறார்கள் தி.மு.க.வினர்!

கலைஞர் தனது மூத்த பிள்ளையாக முரசொலியை வர்ணித்தார். அது இப்படி தலைகுனிவதை எங்களால் தாங்க முடியவில்லை என்றும் திமுக உடன்பிறப்புகள் சிலர் உணர்வுபூர்வமாக குறிப்பிடுகின்றனர்.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close