பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்த பிரசாதம் வாங்கும் பக்தர்களுக்கு முறையாக ரசீது வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாட்டில் அனைத்து கோயில்களிலும் வழங்குவது போல் இங்கும் கம்ப்யூட்டர் முறையில் பில் வழங்கப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தமிழகத்தில் அதிக வருமான ஈட்டும் கோயில்களில் ஒன்றாக உள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் பஞ்சாமிர்தம் உலகப் பிரசித்து பெற்றது. இந்த கடைகளின் விற்பனையாளர்கள் கோயில் நிர்வாகத்தால் டெண்டர் விடப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்யும் நபர்கள் கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பழனி கோயிலில் பக்தர்கள் பணம் கொடுத்து வாங்கப்படும் பஞ்சாமிர்த பிரசாதத்திற்கு எவ்வித ரசீதும் தரப்படுவதில்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்தி விற்பனையாளர்கள் சிலர் அதிக விலைக்கும், அளவு குறைவாகவும் விற்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேள்வி எழுப்பினால், வியாபாரிகள் வாக்குவாதம் செய்வதாக வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையரிடம் பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே திருக்கோயில் மூலமாக விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தத்திற்கு முறையான ரசீது வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் சக்திவேல் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் வழங்கப்படும் பிரசாதங்களுக்கு கம்ப்யூட்டர் முறையில் பில் வழங்கப்பட்டு வருவதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதே போன்று, பழனி முருகன் கோயிலிலும் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்திற்கு ரசீது கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தொடர்ந்து முறையான பில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“