சட்டமன்ற எதிர்கட்சி தலைவராவதற்கு முயன்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அந்த பதவியை கட்சியில் தனது போட்டியாளரான எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக்கொடுத்தார். அதனால், ஓ.பி.எஸ் நேற்று (ஜூன் 14) சட்டமன்றக் கட்சி துணைத் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், சட்டமன்ற கட்சி கொறடா பதவி ஓ.பி.எஸ் ஆதரவாளருக்கு அளிக்கப்படவில்லை. ஆனால், அந்தப் பதவி ஈ.பி.எஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு அளிக்கப்பட்டது. கட்சியை துரோகிகளிடம் இருந்து காப்பாற்றவே ஓ.பி.எஸ் சமரசம் செய்துகொண்டார் என்று கூறப்பட்டாலும் இது அவருக்கு கட்சியில் பின்னடைவாகவே கருதப்படுகிறது.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக ஓ.பி.ஸ் இருந்தார். அதனால்தான், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புகள் காரணமாக முதலமைச்சர் பதவியில் இருந்து விலக நேர்ந்த 2 முறையும் அதிமுகவில் தனது நம்பிக்கைக்குரிய ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார். அதேபோல, ஜெயலலிதா அந்த வழக்குகளில் இருந்து விடுபட்ட பிறகு, ஓ.பி.எஸ் தனது முதலமைச்சர் பதவியை ஜெயலலிதாவுக்காக ராஜினாமா செய்தார். அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்தார்.
2016ல் ஜெயலலிதா இறந்த பிறகு, ஓ.பி.எஸ் முதலமைச்சரானார். ஆனால், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்ற முயற்சி செய்தார். அப்போதுதான் ஓ.பி.எஸ் கிளர்ச்சி செய்து (தர்ம யுத்தம் நடத்தி) அதற்கு தடையை ஏற்படுத்தினார். கூவத்தூ சம்பவங்கள் நடந்துகொண்டிருந்தபோது, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியானதால் சசிகலா சிறை சென்றார். அப்போது அவருடைய ஆதரவாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார்.
முதலமைச்சரான இ.பி.எஸ் விரைவிலேயே ஓ.பி.எஸ் உடன் இணைந்தார். சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும் துணை முதலமைச்சராகவும் கட்சியில் ஓ.பி.எஸ் மீண்டும் முக்கியத்துவம் பெற்றார். அதே நேரத்தில் இ.பி.எஸ் முதலமைச்சராகவும் இணை ஒருங்கிணைப்பாளராகவும் தன்னை நிரூபித்தார். ஓ.பி.எஸ்-ஐ தாண்டி அதிமுகவில் இ.பி.எஸ் தனது செல்வாக்கை உறுதி செய்தார். டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டபோதும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார்.
ஓ.பி.எஸ்-ஸின் கடும் போட்டியையும் தேர்தலில் இ.பி.எஸ் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அவர் மூலமாகவே அறிவிக்க செய்தார். அப்போது, கட்சியின் நலன் கருதி தான் இதை அறிவிப்பதாக ஓ.பி.எஸ் தெரிவித்தார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவினாலும் வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அப்போதும் ஓ.பி.எஸ் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பதவியைக் கோரினார். ஆனால், இ.பி.எஸ் கட்சியில் தனது செல்வாக்கால் எதிர்க்கட்சி பதவியை பிடித்தார். இப்படி, அதிமுகவில் இ.பி.எஸ் எல்லா சூழ்நிலைகளிலும் முன்னேறிக்கொண்டிருந்த நிலையில், இ.பி.எஸ் பின்னடைவை சந்தித்து வந்தார்.
இந்த சூழ்நிலையில்தான், திங்கள்கிழமை நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஓ.பி.எஸ் சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இ.பி.எஸ் எதிர்க்கட்சி தலைவர் பதவியைப் பிடித்துக்கொண்டதால், எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் கொறடா பதவி தனது சாய்சாக இருக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் விரும்பியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், அதிமுகவில் பதவி பங்கீடு முழு பின்னணி என்ன என்று பார்ப்போம்.
இந்த சூழலில்தான் நேற்று (ஜூன் 140 நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியவை ஒன்றாக அமர்ந்து ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தும்படி கேட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர், இபிஎஸ், ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமி மற்றும் ஆர்.வைதிலிங்கம், மூத்த நிர்வாகிகள் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் இரண்டு சுற்று விவாதங்களை நடத்தினர். இதையடுத்து, “கட்சியின் நலனுக்காக துணைத் தலைவர் பதவியை ஏற்குமாறு ஓ.பி.எஸ் மீது பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களிடமிருந்து அழுத்தம் இருந்தது” என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு ஓ.பி.எஸ்-ஆல் மே மாதம் பரிந்துரைக்கப்பட்ட முன்னாள் சபாநாயகர் பி.தனபால், திங்கள்கிழமை நடந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் மருத்துவ காரணங்களால் 6 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை. அதில் தனபாலும் ஒருவர். அவர் தனிப்பட்ட மற்றும் மருத்துவ காரணங்களுக்காக ஆஜராகவில்லை, மீதமுள்ள 60 எம்.எல்.ஏக்கள் ஆஜரானார்கள்.
அனைத்து சாதி குழுக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கும் வகையில் அதிமுக ஒரு தீர்க்கமான அழைப்பை எடுத்தது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொறடாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கொறடா பதவி சட்டசபையில் கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் ஒரு செல்வாக்கு மிக்க பதவியாகும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 10 இடங்களில் அதிமுகவின் வெற்றியை உறுதி செய்ததற்காக கொங்கு கவுண்டர் சமுகத்தைச் சேர்ந்த இ.பி.எஸ்-ஸின் நெருங்கிய ஆதரவாளர் எஸ்.பி. வேலுமணிக்கு அந்த பதவியைப் பெற்றார்.
அதிமுகவில் சட்டமன்றத் துணைக் கொறடாவாக தலித் சமூகத்தைச் சேர்ந்த அரக்கோணத்தில் 3வது முறையாக எம்.எல்.ஏ-வான எஸ்.ரவி தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவில்பட்டியில் கடும் போட்டிக்கு மத்தியில் அமமுக தலைவர் டிடிவி தினகரனை தோற்கடித்த முன்னாள் அமைச்சர் நாயுடு சமூகத்தைச் சேர்ந்த கடம்பூர் ராஜு, பொருளாலராகவும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த தர்மபுரி அதிமுக மாவட்ட செயலாலர் கே.பி.அன்பழகன் செயலராகவும் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர் பி.எச். மனோஜ் பாண்டியனை (ஆலங்குளம் எம்.எல்.ஏ) கொறடாவாக தேர்வு செய்ய வேண்டுமென்று முயற்சியை மேற்கொண்டு தோல்வியடைந்தார். இதனால், அதிமுகவின் பதவி பங்கீட்டில் ஓ.பி.எஸ்.க்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”