செல்போன் பயன்படுத்தியபடி அஜாக்கிரதையாக கார் இயக்கியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்து மதுரை அண்ணாநகர் போலீசார் கைது செய்துள்ளனர். இருசக்கர வாகன சாகசம் செய்தும் பைக் தொடர்பான வீடியோக்களை யூடியூப்பில் பதிவிட்டு பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன். பைக் வீடியோக்கள் பதிவிடுவதால் இவருக்கு பள்ளி சிறுவர்கள், இளைஞர்கள் அதிகம் பேர் இவரை சமூக வலைதளங்களில் பின்தொடர்ந்தனர். பொது வெளியிலும் இவர் சென்றாலும் அதிகம் பேர் இவரை சூழ்ந்து புகைப்படங்கள் எடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக்கை இயக்கி விபத்தில் சிக்கினார். இவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்தனர். 10 ஆண்டுகள் இருசக்கர வாகனத்தை இயக்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் தற்போது, அவர் மற்றொரு புகாரில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும்போது செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 15-ம் தேதி இரவு 7.50 மணிக்கு மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் காரை ஓட்டிய போது செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாகவும், அஜாக்கிரதையாகவும், கவன குறைவாகவும், பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செல்போனில் பேசி கொண்டே ஓட்டுயதாகவும் மே மேலும் அவர் செல்போன் பேசியபடியே காரை இயக்கி அச்செயலை காரின் டேஸ்போர்டு கேமராவில் பதிவு செய்து பின்னர் அதை தன் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை மாநகர ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டரும், சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி அண்ணாநகர் போலீசில் புகார் அளித் தார். அதன்பேரில் போலீசார், டி.டி.எஃப் வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைது செய்யப்பட்ட அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“