ரெட் அலர்ட் வாபஸ் : அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.
இதனால், நாளை (அக்.7) மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மிக மிக அதிக கனமழை பெய்யும் என்று ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டிருந்தனர்.
இந்த நிலையில், மிக மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இல்லாததால், ரெட் அலார்ட் எச்சரிக்கை விலக்கி கொள்ளப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரெட் அலர்ட் வாபஸ்
கோவை, நீலகிரி, விருதுநகர் நெல்லை, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட ரெட் அலார்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், "கோவை, நீலகிரி, விருதுநகர் நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் கடும் மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்படுகிறது.
அதேநேரம் வரும் எட்டாம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை பெய்யக்கூடும்.
ஆனால், அச்சுறுத்தும் வகையில் அவை இருக்காது. அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக மாறி, அது ஏமனை நோக்கி செல்கிறது" என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், நேற்று இரவு முதலே ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் வாங்கவும், பெட்ரோல், டீசல்களை மொத்தமாக போடவும் வரிசையில் நின்ற பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.