Savukku Shankar | Felix Gerald: "சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சில் ரெட் பிக்ஸ்-க்கு உடன்பாடு இல்லை. அது ரெட் பிக்சின் கருத்தும் இல்லை. இருப்பினும், அந்த காணொளியால் காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் வருத்தம் அடைந்து இருப்பதால் ரெட் பிக்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது." என்று ரெட் பிக்ஸ் ஊடகத்தின் பொது மேலாளரும், ஃபெலிக்ஸ் ஜெரால்டின் மனைவியுமான ஜேன் ஃபெலிக்ஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 30.04.2024 அன்று Why Savukku Media is Targeted? என்ற தலைப்பில் ரெட் பிக்ஸ் ஊடகத்தின் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு, சவுக்கு சங்கரை நேர்காணல் செய்தார். தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சவுக்கு சங்கரின் கருத்துதானே தவிர ரெட் பிக்ஸ் ஊடகத்தின் கருத்து அல்ல.
பெண்களின் மாண்பையும், சுயமரியாதையையும் மிக உயர்வாக ரெட் பிக்ஸ் ஊடகம் கருதுகிறது. சவுக்கு சங்கர் பேசிய அந்த சர்ச்சைக்குரிய கருத்து காவல் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, அந்தக் காணொளியை ஒளிபரப்பியதற்காக ரெட் பிக்ஸ் ஊடகம் மனம் திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. சர்ச்சைக்குரிய அந்த காணொளி, வழக்கு நிலுவையில் உள்ளதாலும், காவல் துறை விசாரணைக்கு தேவைப்படுவதாலும் வேறு யாரும் பார்க்காத வண்ணம் ‘பிரைவட்’ (Private) செய்யப்பட்டுள்ளது" என்று ஜேன் ஃபெலிக்ஸ் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“