திருப்பரங்குன்றம் மலைக்கு மேல் தர்கா அமைந்துள்ளது. அங்கு நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ராமலிங்கம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: "திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் உள்ளது. மலைக்கு செல்லும் பாதையில் நெல்லித்தோப்பு பகுதியில் ரம்ஜான் மாதங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வருகின்றனர்.
இதனால் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, திருப்பரங்குன்றம் மலையில் நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியாகவுரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தநிலையில், "திருப்பரங்குன்றம் மலைக்கு மேல் தர்கா உள்ளது. அரை மணி நேரம் தொழுகை நடத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நேரத்தில் தொழுகைக்கு தடை விதிக்க முடியாது", என்று தெரிவித்துள்ளனர்.
இந்த மனு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டதுடன், விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil