நாளை குரூப் 2 தேர்வு: தேர்வாணையம் வெளியிட்ட விதிமுறைகள்

குரூப் 2 தேர்வர்கள், தேர்வு அறையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது

தமிழகம் முழுவதும் நாளை(நவ.11) குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. லட்சக்கணக்கானோர் இந்த தேர்வை எதிர்நோக்கி உள்ளனர். இந்த நிலையில், தேர்வு முறை வழிகாட்டுதல்கள் குறித்து தேர்வாணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1199 பணியிடங்களை நிரப்ப நாளை குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வை எழுத 6 லட்சத்து 26 ஆயிரத்து 726 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 3 லட்சத்து 54 ஆயிரத்து 254 பெண்களும், 2 லட்சத்து 72 ஆயிரத்து 462 ஆண்களும், மூன்றாம் பாலினத்தவர் 10 பேரும் அடங்குவர்.

குரூப் 2 தேர்வை தமிழில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 868 பேர் எழுதுகின்றனர். ஆங்கிலத்தில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 858 பேர் எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 2268 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குரூப் 2 தேர்வர்கள், தேர்வு அறையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அது குறித்த விவரம் இதோ,

தேர்வாணையம் வெளியிட்ட விதிமுறைகள்

தேர்வு எழுதுபவர் அதற்கான ஹால் டிக்கெட்டுடன் வரவேண்டும், இல்லாமல் வந்தால் தேர்வெழுத அனுமதி இல்லை.

தேர்வு எழுதுபவர்கள் ஹால் டிக்கெட்டில் புகைப்படமோ அல்லது கையொப்பமோ சரியாக இல்லை என்றால் அதற்குப் பதிலாக வேற ஒரு அத்தாட்சியை அலுவலரின் சான்றிதழ் பெற்று கொண்டு வரவேண்டும்.

காலை 9 மணிக்குள் தேர்வு எழுதுபவர்கள் தேர்வு அறைக்குள் வர வேண்டும்.

தேர்வு எழுதுபவர்களுக்கு அளிக்கப்பட்ட பதிவு எண்கள் உள்ள தேர்வு அறையில் சென்று தான் அமர வேண்டும்.

தேர்வு எழுத வருபவர்கள் ஹால் டிக்கெட் மற்றும் நீலம் அல்லது கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா மட்டுமே எடுத்து வரவேண்டும்.

கருப்பு அல்லது நீல நிற பால் பாயிண்ட் பேனாவால் மட்டுமே ஓஎம்ஆர் விடைத்தாளை நிரப்ப வேண்டும். பென்சிலில் எழுதக்கூடாது.

தேர்வறைக்குள் செல்போன்கள் உள்ள மின்னணு சாதனப் பொருட்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

தேர்வு எழுதுபவர்களுக்கான ஓஎம்ஆர் விடைத்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், புகைப்படம், பதிவு எண், உள்ளிட்டவை சரியாக உள்ளதா? என்று சரிபார்க்க வேண்டும்.

தேர்வு எழுதும் முன் தங்களது வினாத்தாளில் பதிவு எண்ணை எழுத வேண்டும்.

தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடத்திற்கு முன்பு கேள்வித்தாள் வழங்கப்படும்.

10 மணிக்கு மேல் கேள்வித்தாள் மாற்றித் தரப்படமாட்டாது.

ஓஎம்ஆர் விடைத்தாளில் கேள்விகளுக்குரிய பதிவு எண்ணை தவறாகப் பதிவு செய்தாலும் ஓஎம்ஆர் விடைத்தாள் மாற்றித் தரப்படமாட்டாது.

தேர்வு எழுதுபவர்கள் பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் அதற்கான வினாத்தாள் தரப்பட்டுள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

தேர்வு விடைகளை அவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள ஓஎம்ஆர் விடைத்தாளில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கேள்வித்தாள்களில் அனைத்துப் பக்கங்களும் சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.

காலை 10.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் எந்த தேர்வரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

விடைத்தாள்களில் எதுவும் எழுதக்கூடாது. அப்படி ஏதாவது எழுதப்பட்டிருந்தால் அந்த விடைத்தாள் செல்லாததாகிவிடும்.

ஒரு கேள்விக்கு ஒரு விடையை மட்டுமே எழுத வேண்டும்.

வினாத்தாளில் தேர்வர்கள் விடைகளை குறிக்கக் கூடாது.

தேர்வறைக்குள் தேர்வு எழுதச் செல்லும் தேர்வர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தேர்வு முடியும் முன்பு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தேர்வறையில் காப்பி அடிப்பது, விதிமீறிய செயல்களில் ஈடுபடுவது, தவறான மற்றும் முறைகேடான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

என்று தேர்வாணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close