பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் பா.ம.க.வின் தலைவராக இனி நானே செயல்படுவேன் என்றும் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் கூறியதாவது:-
பா.ம.க.வின் நிறுவனர் மற்றும் தலைவராக இனி நானே செயல்படுவேன். நான் சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை. பதவி பெறும் ஆசை எனக்கு இல்லை. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன்.
கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி முடிவெடுப்போம். பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்படுவார். பா.ம.க. தலைவராக நான் பொறுப்பேற்றதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அந்த காரணத்தை சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிலையில் தற்போது அன்புமணி ராமதாஸை தலைவர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளது பா.ம.க. தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணிக்கு ஆதரவாக போராட்டம்:
பா.ம.க. தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டதற்கு எதிராக, அவரது ஆதரவாளர்கள் திண்டிவனத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் அன்புமணியையே பா.ம.க தலைவராக நியமிக்கக் கோரி முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
”இந்த முடிவு தவறு.. அன்புதானே எல்லாம்”
பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை அய்யா எடுத்த எல்லா முடிவுகளும் சரியே. அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான். ஆனால், இந்த முடிவு தவறு. அன்புதானே எல்லாம் என்று அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா பதிவிட்டுள்ளார். அன்புமணியின் முடிவுக்காக காத்திருக்கிறேன். தனிநபர்களை விட தலைமை பெரியது, தலைமையை விட இயக்கம் பெரியது, இயக்கத்தை விட சமூகம் பெரியது என்றும் திலகபாமா குறிப்பிட்டுள்ளார்.