தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதி, சமூகப் பெயர்களை நீக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் மக்கள் உயிரிழப்பு மற்றும் கல்வராயன் மலைப் பகுதி மக்கள் மேம்பாடு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில், நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கல்வராயன் மலை மேம்பாட்டு தொடர்பான வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அளித்த அறிக்கையை தாக்கல் செய்தார். இதையடுத்து பேசிய நீதிபதிகள், அறிக்கையில் கல்வராயன் மலைப் பகுதியில் அரசுப் பள்ளி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பள்ளியில் அடிப்படை வசதிகள் எந்த அளவுக்கு உள்ளது என்று கூறப்படவில்லை.
அதுமட்டுமல்லாமல் பொத்தமாம் பொதுவாக கடந்த 10 ஆண்டுகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மக்கள் வரிப்பணத்தில் செயல்படும் பள்ளிகளில் சாதிப் பெயர்கள் காணப்படுகின்றன. அவற்றை அரசு அகற்ற வேண்டும்.
ஆங்கிலத்தில் படிக்க: Remove caste/community names from that of government schools, HC tells TN govt
கல்வராயன் மலைகளில் உள்ள "அரசு பழங்குடியினர் குடியிருப்புப் பள்ளி" என்ற பெயரில் அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. அரசுப் பள்ளியின் பெயருடன் ‘பழங்குடியினர்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது தேவையற்றது.
தெருக்களில் உள்ள சாதி பெயரை மாற்றியது போல அரசுப் பள்ளிகளில் உள்ள சாதி பெயரையும் நீக்க முன் வர வேண்டும் என்று கூறினர். இதையடுத்து, பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் தலைமையில் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“