மாமன்னன் ராஜராஜசோழனின் 1039-வது ஆண்டு சதய விழா நேற்று (நவ.9) காலை தஞ்சை பெரிய கோயிலில் தொடங்கியது. விழாவின் தொடக்கமாக சதயவிழாக் குழுத் தலைவர் து.செல்வம் வரவேற்பு உரையாற்றினார். மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.
விழாவில் தொடக்கவுரையாற்றிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் கூறுகையில், "தமிழ் மண்ணில் பல மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளனர்.ஆனால், சோழ வம்சத்தில் ஆட்சிபுரிந்த ராஜராஜ சோழனை மட்டும் ஏன் பெருமன்னன் என அழைக்கிறோம்?
முற்கால சோழர்கள் ஆட்சியின் போது ஏற்பட்ட போர் முறையால் ஆட்சியை களப்பிரர்களிடம் இழந்த சோழர்கள் மீண்டும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அரியணை ஏறினர். இதையடுத்து சோழ மன்னர்களில் ஒருவரான விஜயாலய சோழனின் நிர்வாகத்தை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ராஜராஜ சோழன், முன்னோர்களை காட்டிலும் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை கொண்டு வந்தார்.
அதைத் தொடர்ந்து தஞ்சாவூரைச் சுற்றிலும் மக்கள் வாழ முக்கியத் தேவையான உணவு உற்பத்தியை தொடங்கினர். ராஜராஜ சோழன் காலத்தில் விவசாயம் செழித்தோங்கியது. விவசாயம் நன்றாக இருந்தாலும், தன்னுடைய நாட்டு மக்கள் அமைதியாக வாழ வேண்டும், அருகில் உள்ள அரசர்களின் படையெடுப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தெற்கே குமரியில் தொடங்கி, வடக்கே துங்கபத்ரா நதி வரையுள்ள அரசர்கள் மீது போர் தொடுத்து, தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார் ராஜராஜசோழன்.
தன்னுடைய ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்திய பின்னர் ராஜராஜசோழன் சமயத்தையும், தமிழையும் வளர்க்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினார். அப்போது பல்லவர்கள் காலத்தில் காஞ்சியில் கட்டிய சில கோயில்களை பார்த்துவிட்டு, அதை விட நாம் சிறந்த கோயிலைக் கட்ட வேண்டும் எனக் கருதி 1006 -ம் ஆண்டு கட்டத் தொடங்கி, 1010-ல் கட்டி முடித்தது தான் இந்த தஞ்சாவூர் பெரிய கோயில். பின்னர் 1010-ம் ஆண்டு இந்த கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
திருவள்ளுவருடைய வழியை உள்வாங்கிக் கொண்ட ராஜராஜசோழன், பசியும், நோயும், பகையும் இல்லாத நாடாக உருவாக்கினார். ராஜராஜசோழன், வள்ளுவன் வழியில் இறை நம்பிக்கையோடு ஆட்சி புரிந்தார்.
இந்த தஞ்சை மண்ணிலே இருக்கக்கூடிய தமிழுக்கு தொண்டாற்றக் கூடிய, தமிழுக்காக உருவாக்கப்பட்டுள்ள தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு, ராஜராஜ சோழன் பெயரை தமிழ்நாடு அரசு சூட்ட வேண்டும். அவ்வாறு செய்தால் அது பெருமன்னன் ராஜராஜனுக்கு செய்கிற சிறப்பாக இருக்கும்" என்று பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“