/indian-express-tamil/media/media_files/2025/04/02/V1VNjHeOwehnJ5xVZwtt.jpg)
திருவண்ணாமலையில் 554 ஏக்கர் பரப்பு... பாதுகாக்கப்பட்ட வன பகுதியாக அறிவிக்க வேண்டும்: சிறப்பு குழு பரிந்துரை
திருவண்ணாமலையில் உள்ள 554 ஏக்கர் நிலப்பரப்பை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான கண்காணிப்புக் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
திருவண்ணாமலை மலையில் உள்ள நீர்நிலைகள் மற்றும் ஓடைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கண்காணிப்புக் குழுவை அமைத்தது.
நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கண்காணிப்புக் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது. அறிக்கையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், கடந்த ஆறு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவண்ணாமலையில் உள்ள 554 ஏக்கர் பரப்பை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க மாவட்ட நிர்வாகம் வனத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர், மின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.