திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் கடந்த (25.01.23)-ம் தேதி 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தும், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் வந்த தகவலின்படி விசாரணை மேற்கொண்டதில், குற்றம் சாட்டப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாக்கியராஜ் மகன் பிரபின் கிறிஸ்டல்ராஜ் வயது 40 மற்றும் திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த ரமிஜா பானு வயது 50 ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், விசாரணையில், குற்றவாளி பிரபின் கிறிஸ்டல்ராஜ் கடந்த 15 வருடங்களாக தொலைகாட்சி நிறுவனங்களில் நிருபராக வேலை பார்த்து, தற்போது “சிலந்தி வலை” என்ற மாதாந்திர பத்திரிக்கையில் நிருபராக பணிபுரிவதும், மேற்படி ரமீஜா பானுவுடன் சேர்ந்துக்கொண்டு பல பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அவர்களது வாழ்க்கையை சீரழித்ததும், மேற்படி பாதிக்கப்பட்ட சிறுமியை பல நபர்களுக்கு ஏமாற்றியும், கட்டாயப்படுத்தியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதும், அச்சிறுமியை பிரபின் கிறிஸ்டல்ராஜ் கட்டாயப்படுத்தி, அச்சுறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இக்குற்ற செயல்களுக்கு மேற்படி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரும் உடந்தை என்பது தெரியவந்தது.
எனவே, குற்றவாளிகள் பிரபின் கிறிஸ்டல்ராஜ் மற்றும் ரமீஜா பானு ஆகியோர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் என விசாரணையில் தெரிய வருவதால், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, திருச்சி மத்திய சிறையில் உள்ள குற்றவாளிகள் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், திருச்சி மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்ரியா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“