சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், கணேசபுரம், கெங்கு ரெட்டி, செம்பியம், வில்லிவாக்கம், துரைசாமி, மேட்லி, ரங்கராஜபுரம், மவுண்ட், சைதாப்பேட்டை, பழவந்தாங்கல், சிபி சாலை, வியாசர்பாடி, திருவொற்றியூர், ஆர்பிஐ சுரங்கபாதை, கோயம்பேடு, சேத்துப்பட்டு, சூளைமேடு சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன.
இதுவரை 37 இடங்களில் முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் 5 பேர் வரை உயிரிழந்துள்ளதாக டிச.4ஆம் தேதி சென்னை மாநகர காவல் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று கனமழைக்கு 17 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மழை வெள்ளம், மின்சார தாக்குதல், மரம் முறிந்து விழுதல் உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளில் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் புயல், மழை பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். சென்னை செண்ட்ரல் கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
நிவாரண முகாமில் உள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“