டெல்லியில் ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி இடம் பெற வேண்டும் எனக் கோரி முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், குடியரசு தின அலங்கார ஊர்தி தொடர்பாக மறுபரிசீலனைக்கு இடமில்லை என்று மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
டெல்லியில் ஜனவரி 26ம் தேதி நடைபெற உள்ள இந்தியாவின் குடியரசு தின விழா அணி வகுப்பில் தமிழ்நாடு மாநிலத்தின் அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதிக்கப்பட வில்லை என்று தகவல் வெளியானது.
இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில், தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெறவில்லை. இது தமிழகத்தில் சர்ச்சையையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதனால், இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கை அங்கீகரிக்கும் விதமாக, அமைக்கப்பட்ட வ.உ.சி, வேலு நாச்சியார், மகாகவி பாரதியார் சிலைகள் அமைந்த தமிழக அரசின் அலங்கார ஊர்தி குடியரசு தின அணி வகுப்பில் இடம் பெற வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தினர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசு தின அணிவகுப்பில், தமிழ்நாடு மாநிலத்தின் அலங்கார ஊர்தி இடம் பெற வேண்டும் எனக் கோரி, குடியரசு தின அணிவகுப்பு ஊர்தியில் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், குடியரசு தின அணிவகுப்பில், அலங்கார ஊர்தி பங்கேற்பது தொடர்பாக, மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கைக்கு மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “குடியரசு தின அணிவகுப்பில் எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பது குறித்த முடிவை மத்திய அரசு எடுப்பதில்லை. கலை, கலாச்சாரம், சிற்பம், இசை, கட்டிடக் கலை, நடனம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நிபுணர்கள் குழுதான் இது சம்பந்தமான பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுத்து வருகிறார்கள். நேரமின்மை காரணமாக சில முன்மொழிவுகளை மட்டுமே ஏற்க முடியும். 2022ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பை பொறுத்தவரை, மாநிலங்கள், மத்திய அமைச்சரகளிடம் இருந்து மொத்தம் 56 பரிந்துரைகள் பெறப்பட்டன. இதில் 21 பரிந்துரைகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது. நேரமின்மை காரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளைவிட அதிகமான முன்மொழிவுகள் நிராகரிக்கப்படுவது இயல்பான விஷயம். இந்த ஆண்டு சுமார் 12 பரிந்துரைகள் மட்டுமே ஏற்பட்டிருக்கின்றன. இருப்பினும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஏற்கெனவே, 2016, 2017, 2019, 2021ம் ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு இருக்கும்போது, இந்த பரிந்துரைகள் எல்லாம் ஏற்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு பார்க்கும் போது இந்த சூழ்நிலை காரணமாகத்தான், நிபுணர் குழுவால் இந்த பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டது” விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு முதல்வர் மேற்கு வங்கம் முதல்வர் எழுதிய கடிதங்கள் பெறப்பட்டன. இந்து சம்பந்தமாக நிபுணர்கள் குழு ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளதால், தமிழ்நாடு, மேற்கு வங்க மாநில அலங்கார ஊர்தி இடம்பெறுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை என்று விளக்கம் தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"