Advertisment

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்திக்கு அனுமதி இல்லையா? தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என செய்தி வெளியான நிலையில், அது வதந்தி என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
republic day

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது வதந்தி என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில்,  அது வதந்தி என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. 

Advertisment

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தலைநகர் டெல்லியில் மாநில அரசுகளின் சார்பில் அனுப்பப்படும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதன்படி, 2025 குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்குபெற 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அணிவகுப்பு நிகழ்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை. தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. அதே நேரத்தில், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஆந்திர பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு அனுமதி கிடைக்கவில்லை என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு ஊர்திக்கு அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் தி.மு.க அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.

Advertisment
Advertisement

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட எடப்பாடி பழனிசாமி, “குடியரசு தின விழாவில், தலைநகர் டெல்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில் , தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி அ.தி.மு.க ஆட்சிக்காலங்களில் இடம்பெறுவது மரபு. ஆனால், தி.மு.க அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடியரசு தின விழாவில் இந்த ஆண்டும் அலங்கார ஊர்தி இடம்பெறாத வெட்கக் கேடான நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன், தி.மு.க அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும் , அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் எனது கடுமையான கண்டனங்கள்”  என்று தெரிவித்தார்.

இதேபோல் டெல்லியின் அலங்கார ஊர்திக்கும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை. இது பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியல் என டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். டெல்லியின் அலங்கார ஊர்திக்கு தொடர்ந்து 4-வது ஆண்டாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. 

தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு அனுமதி இல்லை என்பது  முற்றிலும் தவறான தகவல் என்றும் 2025ம் ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி பங்கேற்க இயலாது என்றும் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பில் 15 மாநில, யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு அலங்கார ஊர்தி பங்கேற்க தேர்வு செய்யப்படும்; சுழற்சி முறையில் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது. 2024 அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது. இனி 2026-ம் ஆண்டு அணிவகுப்பில் மட்டுமே பங்கேற்க இயலும் என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்து பதிவிட்டிருப்பதாவது: “குடியரசு தினம் : தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி 

2025ம் ஆண்டு குடியரசு தின விழாவில், தலைநகர் டில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பட்டதாகப்  பரப்பப்படுகிறது. 

இது முற்றிலும் தவறான தகவல். 2025ம் ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி பங்கேற்க இயலாது. 

டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு அலங்கார ஊர்தி பங்கேற்க தேர்வு செய்யப்படும். ஆனால், சுழற்சி முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது. 

2024 அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது. இனி அடுத்த 2026 ஆண்டு அணிவகுப்பிலே பங்கேற்க இயலும். ஆனால், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாகத் தவறான தகவல்கள் பரவி வருகிறது. 

வதந்தியைப் பரப்பாதீர்!” என்று விளக்கம் அளித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment