Advertisment

பழனி முருகன் கோவில்.. அன்னைத் தமிழில் குடமுழுக்கு; பெ. மணியரசன் கோரிக்கை

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு முன்பும் குடமுழுக்கின் போதும், குடமுழுக்கு பின்பும் நடைபெறும் அனைத்து வகை அர்ச்சனை மற்றும் வழிபாடுகளில் சரிபாதியாக தமிழ் மந்திர வழிபாடு இடம்பெறச் செய்ய வேண்டும்.

author-image
WebDesk
Jan 18, 2023 20:57 IST
New Update
Request to conduct Kumbabhishekam in Tamil at Palani Murugan temple

பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பெ. மணியரசன்.

பழனி முருகன் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் அர்ச்சகர்கள், தமிழ் மந்திரம் ஓதிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவது குறித்து தெய்வத்தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் மணியரசன் திருச்சி பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்,

Advertisment

அப்போது அவர் கூறுகையில், “ஜனவரி மாதம் 27 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

இந்த குடமுழுக்கு விழாவுக்கு முன்பும் நன்னீராட்டின் போதும் அதற்கு பின்பும் கருவறை வேள்விச்சாலை கோபுர கலசம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பழனி ஆண்டவர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் தமிழ் மந்திரங்கள் மூலம் கிரியை உள்ளிட்ட வழிபாட்டு முறைகளை செயல்படுத்துமாறு வேண்டுகோள் மனு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபனிடம் தமிழ் பேரவை செயற்குழு உறுப்பினர்கள் நேரில் சென்று மனு அளித்தனர்.

மேலும், தற்போது தமிழகத்தில் உள்ள திமுக அரசு கடந்த வருடம் அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தை தொடங்கியது.

தமிழ்நாட்டில் உள்ள 47 முதன்மை கோவில்களில் செயல்படுத்தி வந்தது அதற்கு எந்த நீதிமன்றமும் தடை போடவில்லை.

அதற்கு முன் இதே திமுக ஆட்சி கடந்த 1997 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைத்துறை மூலம் சுற்றறிக்கை அனுப்பி கருவறையில் தமிழ் அர்ச்சனை செய்வதை நடைமுறைப்படுத்தியது.

சுற்றறிக்கை மற்றும் செயல்பாட்டை எந்த நீதிமன்றமும் எப்போதும் தடை செய்யவில்லை. மேலும் தமிழ்நாடு அரசு கடந்த 2007-ல் ஆறு தமிழ் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை உருவாக்கி பயிற்சி கொடுத்து இருநூறுக்கும் மேற்பட்டோருக்கு அர்ச்சகர் சான்றிதழும் கொடுத்துள்ளது.

பல்வேறு பிரிவு தெய்வங்களுக்கும் உரிய தமிழ் கிரியை மந்திர நூல்களையும் வெளியிட்டது. இவற்றையெல்லாம் எந்த நீதிமன்றமும் தடை செய்யவில்லை.

குறிப்பாக தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கும் கரூர் பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு நடந்தபோது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழ் சமஸ்கிருதம் இரண்டிலும் முறையே 50-50 என்ற விழுக்காட்டில் மந்திரம் சொல்லி வழிபாடு நடத்துமாறு ஆணையிட்டது.

நடைமுறை உண்மைகள் இவ்வாறு இருக்க தற்போது தமிழ்நாடு அரசு பழனி முருகன் கோயில் திருக்குடமுழக்கில் கருவறை வேள்விச்சாலை, கோபுர கலசம் ஆகியவற்றில் தமிழ் மந்திரம் ஓதி குடமுழுக்கு நடத்த மறுப்பது சட்டவிரோத செயலாகும்.

அத்துடன் தமிழர் தாயகத்திலேயே தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழ் கிரியை மந்திரங்கள் ஓதி அர்ச்சனை செய்ய குடமுழுக்கு நன்னீரட்டு விழா நடத்த மறுப்பது தாய் தமிழ் மொழிக்கும், தமிழ் தெய்வங்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும்.

இந்த சட்ட விரோத செயலை இந்து தமிழ் மறுப்பு அநீதியை மூடி மறைக்கும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை பழனி முருகன் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழா நிகழ்ச்சி நிரல் மற்றும் அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ஓதுவார்கள் தமிழ் மந்திர அர்ச்சனை செய்வது பற்றி எந்த ஒரு குறிப்பும் இல்லை. மேலும், வெளியே நின்று பாடும் தேவாரத் திருமுறைகளும், கந்தரலங்கார பாடல்கள் மட்டும் தலைப்பு வழியாக கொடுக்கப்பட்டுள்ளன.

எனவே, பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு முன்பும் குடமுழுக்கின் போதும், குடமுழுக்கு பின்பும் நடைபெறும் அனைத்து வகை அர்ச்சனை மற்றும் வழிபாடுகளில் சரிபாதியாக தமிழ் மந்திர வழிபாடு இடம்பெறச் செய்ய தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற ஜனவரி 20-ம் தேதி பழனி மாவட்டம் மயில் ரவுண்டானாவில் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது” எனத் தெரிவித்தார்.

இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது தேனி மாவட்டம் ராச யோக சித்தர் பீடம் வடகுரு மடாதிபதி குச்சனூர் கிழார், வள்ளலார் பணியகம், ஒருங்கிணைப்பாளர் ரசமாணிக்கம், தெய்வத்தமிழ் பேரவை செயற்குழு உறுப்பினர் ராமராசு ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

#Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment