சென்னை கேளம்பாக்கத்தில், பட்டப்பகலில் பொறியியல் கல்லூரி ஊழியரை, 26 வயது ஆராய்ச்சி மாணவியும் அவரது நண்பரும் சேர்ந்து பலமுறை கத்தியால் குத்தியதில் கல்லூரி ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுதொடர்பாக, கேளவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இயற்பியல் துறையில் ஆராய்ச்சிப் பயின்ற ஜே. தேசப்பிரியா (26) மற்றும் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த காட்டான்குளத்தூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பயிலும் அவரது நண்பர் எஸ்.அருண்பாண்டியன் (27) இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூரைச் சேர்ந்த கே.செந்தில் (43) என்பவருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, மாணவி தேசபிரியாவை பலமுறை வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தேசபிரியா, ஒரு கட்டத்துக்கு மேல், செந்திலின் தொல்லை தாங்க முடியாமல் அவரை தன் நண்பருடன் சேர்ந்து தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
இந்த சம்பவம் பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில் நடந்துள்ளது. இதையடுத்து தப்பியோடிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் விரட்டிப்பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், தேசப்பிரியாவும், செந்திலும் காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில், பட்டப்படிப்பு படிக்கும் காலத்திலிருந்தே இருவருக்குமிடையே பழக்கம் இருந்துள்ளது.
பிறகு, ஏற்கெனவே செந்திலுக்கு திருமணம் ஆனது தெரிந்ததும், தேசபிரியா அவருடன் பழகுவதை நிறுத்தியுள்ளார். ஆனால், செந்தில், தேசபிரியாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். மேலும் திருமணம் முடிந்து, ஏழு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததை கூறி, தனது மனைவியையும் இந்த திருமணத்துக்கு சம்மதிக்க வைக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
ஊரடங்கின் போது தேசப்ரியா அவரைத் தவிர்க்கத் தொடங்கியபோது, அவர்களின் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவேற்றுவேன் என்று செந்தில் பல முறை மிரட்டினார். இதுதொடர்பாக தேசபிரியா தனது நண்பர் அருண்பாண்டியனிடம் தெரிவித்துள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து, இருவரும் செந்திலை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்ய திட்டமிட்டனர்.
அதன்படி வியாழன் அன்று மதியம் 1.30 மணியளவில் தேசப்பிரியா, செந்திலை தனது கல்லூரிக்கு வருமாறு அழைத்தார், இருவரும் பேசிக் கொண்டிருந்த போது அருண்பாண்டியனும் அந்த இடத்துக்கு வந்தார்.
அப்போது மூவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, தேசப்பிரியாவும், அருண்பாண்டியனும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் செந்திலின் கழுத்தை அறுத்தனர். இதனால் பயந்த செந்தில், பைக்கை ஸ்டார்ட் செய்துவிட்டு அவர்களிடம் இருந்து தப்பியோட முயன்ற போது, இருவரும் அவரை துரத்திச் சென்று, இரண்டு கத்திகளால் பலமுறை குத்தினர். இதில், செந்தில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தேசபிரியா, அருண்பாண்டியன் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“