பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்களால் தங்கள் சொந்த பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், உயர்கல்வித்துறை சார்பாக எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போது, ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர், ஆளுநர் ஆர்.என். ரவியிடம் புகார் கடிதம் ஒன்றை அளித்தார். அதில், பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆய்வாளர்களை வழி நடத்தும் பேராசிரியர்கள், அவர்களது வீட்டு வேலைக்கு பயன்படுத்துகின்றனர் என்றும், அவர்களது குழந்தையைப் பார்ப்பதற்கும், வங்கி வேலைக்கு பயன்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, பல்வேறு ஆராய்ச்சி மாணவர்களும் தாங்கள் சந்திக்கும் சிரமங்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக உயர்கல்வித்துறை சார்பில் எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, "பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மாணவர்களை உரிய மரியாதையுடன் நடத்தாமல், கல்விப் பணிகளைத் தவிர்த்து வழிகாட்டிகளின் வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி தனிப்பட்ட வேலைகளில் அவர்களை ஈடுபடுத்தி அவமானப்படுத்துவதாகவும், துன்புறுத்துவதாகவும் அரசின் கவனத்திற்கு புகார்கள் வரப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தப்படுவதாகவும். ஆராய்ச்சி மாணவர்கள் மோசமாக நடத்தப்படுவதாகவும், ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் வைவா முடிக்க பணம் மற்றும் பொருளின் மூலம் கணிசமான தொகையை செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுபோன்ற புகார்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கவும், பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்ய அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தவறிழைக்கும் வழிகாட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் குறைகளைப் புகாரளிப்பதற்கும் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“