தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவத்தில் Category Of School என மாணவர்கள் படித்த பள்ளியின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. இதனால் அரசுப் பள்ளிகளில் படித்த பல ஆயிரம் மாணவர்கள் தொழில்நுட்ப படிப்புகளுக்கான சேர்க்கைகளில் இந்த ஆண்டு உள் ஒதுக்கீடு பெறுவார்கள் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், மருத்துவ படிப்புகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, அ.தி.மு.க., அரசு அறிமுகம் செய்தது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் இன்ஜினியரிங், கால்நடை மருத்துவம், சட்டம் உள்ளிட்ட மற்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது.
கடந்த சில ஆண்டுகளாக தொழில்நுட்பம், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் மற்றும் சட்டம் உள்ளிட்ட படிப்புகளில், குறைந்த எண்ணிக்கையிலான அரசு பள்ளி மாணவர்களே பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீடு இடங்கள், புகழ்பெற்ற சுயநிதி கல்லூரிகள் மற்றும் அரசு நடத்தும் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்த மாணவர் சேர்க்கை குறைவு குறித்த அறிக்கையின் அடிப்படையில் அரசு குழு அமைக்க முடிவு செய்தது.
இந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் அரசு மாணவர்களுக்கு சாதகமான முடிவை விரைவில் அரசு எடுக்கும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், "விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யும் போது, ஒவ்வொரு மாணவரும் ஆறாம் வகுப்பு முதல் படித்த பள்ளிகளின் விவரங்களை குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டவுடன், அரசு பள்ளிகளில் குறைந்தது ஆறு ஆண்டுகள் படித்த மாணவர்களின் விவரங்கள் தனி பட்டியலாக உருவாக்கப்படும். இந்த கல்வியாண்டிற்கான இடஒதுக்கீட்டை அரசு அறிவித்தால் அதற்கேற்ப தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும்.
தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று ஆன்லைன் விண்ணப்பத்தில் DOTE எங்கும் சுட்டிக்காட்டவில்லை. அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் பட்டியலை மட்டுமே தற்போது தயாரித்து வருகிறது" என கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil