தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இடம் ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் கட்சிகள் தாக்கல் செய்த மனு இன்று (ஜூன் 11) விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றம் சில முக்கிய வாதங்களை தெளிவுபடுத்தியது
Advertisment
ஒவ்வொரு கல்வியாண்டும் மாநிலங்களில் உள்ள மருத்துவ இடங்களில் 15%, மருத்துவ மேற்படிப்பில் 50% இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதில், கடந்த சில ஆண்டுகளாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை மத்திய அரசு முறையாக அமல்படுத்தவில்லை. இதை எதிர்த்து திமுக, மதிமுக, காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட் கட்சிகள் என பல கட்சிகள் குரல் கொடுத்தன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்தன. இந்நிலையில் தமிழக அரசும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உச்ச நீதிமன்றம் சென்றது.
இன்று (ஜூன் 11) அவற்றை விசாரிப்பதற்கு முன்பே, உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் 50% ஓபிசி இடஒதுக்கீட்டை அமல்படுத்தாமல், யுஜி மற்றும் பிஜி மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கவுன்சிலிங் தொடர்வதைத் தடுக்குமாறு வைத்த கோரிக்கையையும் ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், கிருஷ்ணா முராரி மற்றும் ரவீந்திர பட் ஆகிய நீதிபதிகள் , இட ஒதுக்கீடு தொடர்பாக ஒரே கருத்தோடு மனு செய்துள்ள உங்களை நாங்கள் பாராட்டுகிறோம். ஒரே காரணத்திற்காக பல அரசியல் கட்சிகளை ஒரே கோரிக்கையோடு பார்த்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது தமிழகத்திற்கு அசாதாரணமானது என்று குறிப்பிட்டதோடு, இடஒதுக்கீடு உரிமையை ஒரு அடிப்படை உரிமையாக யாரும் கோர முடியாது, எனவே ஒதுக்கீடு சலுகைகளை வழங்காதது எந்தவொரு அரசியலமைப்பு உரிமையையும் மீறுவதாக கருத முடியாது. இடஒதுக்கீடு உரிமை என்பது ஒரு அடிப்படை உரிமை அல்ல, அதுதான் இன்றைய சட்டம் என்று கூறினார்கள்.
"யாருடைய அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன? பிரிவு 32 அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு மட்டுமே கிடைக்கிறது. நீங்கள் அனைவரும் தமிழக குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் ஆர்வம் காட்டுவதாக நாங்கள் கருதுகிறோம். ஆனால் இடஒதுக்கீடு என்பது உரிமை. அடிப்படை உரிமை அல்ல" என்று பெஞ்ச் கூறியது. எனவே இந்த வழக்குகளை வாபஸ் பெறவும், மனுக்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியது உச்ச நீதிமன்றம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“