கோவை லங்கா கார்னர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடத்திலேயே மதுப்பானக் கடை இருப்பதால் பெண்கள், குழந்தைகள் வெளியில் செல்ல முடியாமல் கடும் இன்னல்களை சந்தித்து வருவதாக கூறியுள்ளனர். இது குறித்து லங்கா கார்னர் பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், "இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் மதுப்பிரியர்கள் மது அருந்திவிட்டு பலரும் பாட்டில்களை ஆங்காங்கே போட்டு விட்டு செல்கின்றனர்.
பல சமயங்களில் பாட்டில்கள் உடைக்கப்பட்டு வீடுகளுக்கு முன்பே பாட்டில் துண்டுகள் சிதறி கிடக்கிறது. சிலர் மது அருந்திவிட்டு சாலையில் ரகளையில் ஈடுபடுகின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள் வெளியில் நடமாட முடியவில்லை. சில நேரங்களில் வீட்டில் யாரும் இல்லை என்றால் வீட்டின் முன்பே சிறுநீர் கழித்து விட்டு செல்கின்றனர். நிம்மதியாக இருக்க முடிவதில்லை. குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது. இதை தட்டி கேட்டால் குடிபோதையில் இழிவாக பேசுகின்றனர். அருகில் இருக்கும் கடைக்கு கூட சென்று வர முடிவதில்லை.
இங்குள்ள மதுக்கடை இரவு, பகல் என எல்லா நேரமும் இயங்கி வருகிறது. அதானல் மதுப்பிரியர்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. ரகளையில் ஈடுபடும் நேரங்களில் அவ்வப்போது காவல் துறை உதவியுடன் சமாளித்து வருகிறோம்.
இப்பிரச்சனைகள் குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனுவாக வழங்கி உள்ளோம். ஆனால் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதனால் இனியும் தாமதிக்காமல் ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“