சென்னையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போயஸ் கார்டன் இல்லம்:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம், அவரது நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.பின்னர், அந்த நினைவு இல்லம், பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து அதற்கான பணிகளை தமிழக அரசு துவங்கியது.
இந்நிலையில், வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற எதிர்க்கட்சிகள் வரவேற்றாலும், அமமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தரப்பினர் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் இதற்கு எதிர்ப்பு குரல்கள் விடுத்தனர்.
இதுத் தொடர்பாக தீபா தெரிவித்ததாவது, “ ” வேதா இல்லமானது எங்களது பூர்வீக சொத்து. இதனை வாங்கவோ, விற்கவோ யாருக்கும் உரிமை கிடையாது.இந்த இல்லத்திற்கு உரிமையானவர்களான எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பாமல் முதலமைச்சர் இவ்வாறு அறிவித்திருப்பதை நான் சட்டப்படியாக எதிர்க் கொள்வேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது சம்பந்தமாக சில தினங்களுக்கு முன்பு போயஸ் தோட்டத்தில் நடைப்பெற்ற கருத்து கேட்கும் கூட்டத்தில் போயஸ் கார்டன் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது, வேதா நிலையத்தை அரசுடமையாக்க அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் வேத நிலைய இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் அது தொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்ய உள்ளதாக என மனுதரார் தரப்பில் கோரிக்கை.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த பொதுநல மனுவில் மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சென்னை போயஸ் கார்டன் வேத நிலைய வீட்டை தமிழக அரசு நினைவிடமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக அரசாணையை கடந்த ஆண்டு வெளியிட்டுள்ளது சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட 4 பேரும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் வேத நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்றுவது தவறானது. இதுதொடர்பாக, தமிழக அரசு கடந்த ஆண்டு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரி தன் கோரிக்கை மனு அளித்ததாகவும் ஆனால் இதுவரை அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.
எனவே அரசு செலவில் ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக மாற்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் இது தொடர்பாக பிறப்பிக்கபட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜராகி இருந்த அரசு பிளீடர், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ஒரு மாதம் கால அவகாசம் தேவை என கூறியிருந்தார்.
அப்போது மனுதரார் தரப்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர் அரவிந்தன், மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தற்போது வரை வழக்குகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக அந்த பகுதி பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தபட்டது. ஆனால் நினைவு இல்லமாக மாற்ற அந்த பகுதி பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே இது தொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து கூடுதல் மனுவை வரும் 20 ஆம் தேதிக்கு தாக்கல் செய்ய அனுமதித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணை அன்று எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்து. விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.