ஒரு காலத்தில் அதிமுகவில் அம்மாவுக்கு (ஜெயலலிதா) அடுத்து கட்சியில் செல்வாக்கானவராக கருதப்பட்ட சசிகலாவை சின்னம்மா என்று அழைத்த அதிமுகவினர் இன்று “உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணி, அதிமுக-வை அபகரிக்கும் கொள்ளைக்காரி, ஊழல் சாம்ராஜ்யத்தின் ராணி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதுதான் அரசியலோ என்று கேட்கும் அளவுக்கு சசிகலாவுக்கு எதிராக இ.பி.எஸ் ஒரு பெரிய ஆயுதத்தை பயன்படுத்தியுள்ளார்.
அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக இருந்த ஜெயலலிதா 2016ல் மறைந்த பிறகு, அவரத் நெருங்கிய தோழியான சசிகலா கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற முயன்றார். ஆனால், ஓ.பி.எஸ் நடத்திய தர்ம யுத்தத்தால் அது தடைபட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் அந்த முயற்சி கனவானது. இறுதியில் அவரது ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். விரைவிலேயே அவர் ஓ.பி.எஸ் அணியை இணைத்துக்கொண்டார். சசிகலாவையும் அவரது உறவினர்களையும் கட்சியில் இருந்து வெளியேற்றினார்.
கடந்த 4 ஆண்டுகளில் ஆட்சியில் தன்னை ஒரு ஆக்டிவ்வான முதலமைச்சராக விமர்சனங்களுடன் எடப்பாடி பழனிசாமி நிரூபித்துள்ளார். கட்சியிலும் தனது பிடியை உறுதியாக்கினார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தலும் ஓ.பி.எஸ் இப்போது எல்லாவற்றிலும் பின்னிறுக்கையில்தான் உள்ளார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியைத் தவிர அவரால் வேறு எந்த பதவியையும் கட்சியில் இருந்து பெற முடியவில்லை. ஓ.பி.எஸ் முடிந்தவரை தனக்கு முன்னுரிமை இருப்பதாக ஒவ்வொரு இடத்திலும் சூழலிலும் காட்ட வேண்டிய நிலையிலேயே உள்ளார். ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவருக்கும் இடையே புகைச்சல் இருந்தாலும் ஒரு போதும் இருவரும் கட்சியை உடைக்க விரும்பமாட்டார்கள். ஏனென்றால், அதனால், இருவருக்குமே பலனில்லை.
தேர்தலுக்கு முன்னதாக தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தேர்தலில் பங்கேற்பார் அதிமுகவைக் கைப்பற்ற முயற்சிப்பார் என்று எதிர்பார்த்த அரசியல் ஆருடர்களின் கணிப்பை பொய்யாகினார். அரசியலில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார்.
சசிகலாவின் இந்த முடிவுக்கு காரணம், இந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும். அதனால், அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும். தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை கைப்பற்றும் வேலை சுலபமாக இருக்கும் என்று திட்டமிட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அதிமுக 10 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகும், ஜெயலலிதா இருந்த காலத்தைப் போலவே நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்தது. எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராகி அதிமுகவில் தன்னை நிரூபித்து தொண்டர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். அதனால், சசிகலாவின் கணிப்பு பொய்யாகிப் போனது. அதிமுகவில் சசிகலாவின் ஆதரவு தளம் என்பது கரைந்து போனது.
தற்போது அதிமுகவில் உள்ள 66 எம்.எல்.ஏ.க்களில் 98 சதவீதம் எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக உள்ளனர். அதனாலேயே, ஓ.பி.எஸ் அதிமுகவில் தனக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு பெரிய அளவில் உரசல்களை மேற்கொள்ளமல் அமைதியாகச் செல்கிறார். ஆனாலும், மனம் தளராத சசிகலா, அதிமுக தொண்டர்களிடம், நான் மீண்டும் அரசியலுக்கு வருவேன். அதிமுகவை கைப்பற்றுவேன். கட்சியை சரி செய்துவிடலாம் என்று பேசிய ஆடியோக்களை வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தினார். ஆனால், எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் ஆடியோ வெளியிட்டது ஒரு பூச்சாண்டி வேலை என்று அவருடன் போனில் பேசிய 15 நிர்வாகிகளையும் கட்சியில் இருந்து அதிரசியாக நீக்கினார். இப்போது, பலரும் ஒருவேளை சசிகலா போன் செய்தால் பேசுவதற்கு அச்சப்படுவதாகக் கூறுகிறார்கள்.
அதிமுகவில் அடிமட்ட நிர்வாகிகள், தொண்டர்களுடன் பேசி தனக்கு அதிமுகவில் செல்வாக்கு இருப்பதாகக் காட்ட முயலும் சசிகலாவின் நடவடிக்கைக்கு இதன் மூலம் பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல், சசிகலாவுக்கு கட்சியின் அடிமட்டத்தில் இருந்தே எதிர்ப்பு தெரியப்படுத்த வேண்டும் என்று இ.பி.எஸ் முடிவு செய்தார். அண்மையில் சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில், சசிகலாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருக்கும் விஷயங்கள்: “அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்த அம்மாவை ஊழலுக்கு உடந்தையாகச் செயல்படவைத்து, தண்டனை பெற்றுக்கொடுத்த விஷமக்காரி. அம்மாவால் இரண்டுமுறை கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டவர். அம்மா மறையும் வரையில், அவரைக் கட்சியில் உறுப்பினராகச் சேர்க்கவில்லை. அவரே தன்னுடைய வாக்குமூலத்தில் உயிர் இருக்கும்வரை என் உறவினர்களுடன் இணைந்து செயல்பட மாட்டேன் என உறுதி கொடுத்தவர். ஆனால், அவர்களுடன் மீண்டும் இணைந்து கட்சியைக் கைப்பற்றத் துடிக்கிறார். தொண்டர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். யாராவது அவருடன் தொலைபேசியில் பேசியது தெரிந்தால் தலைமையின் அனுமதி இல்லாமல், மாவட்டச் செயலாளர்களே நடவடிக்கை எடுக்கலாம்.
நாட்டு மக்களின் வரிப்பணத்தை நயவஞ்சமாகக் கொள்ளைக் கூட்டம்போல் கூட்டுச் சேர்ந்து சதி செய்து, கொள்ளையடித்ததால் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு நான்கு ஆண்டுக்காலம் சிறையில் கம்பி எண்ணிவிட்டு, இப்போது வந்து கழகத்தைக் களங்கப்படுத்த நினைக்கும் சசிகலாவைக் கண்டிக்கிறோம்” என்று கடுமையான வார்த்தைகளில் குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அதிமுகவின் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கூட்டங்களிலும் சசிகலாவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற இ.பி.எஸ் முடுக்கி விட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனால், சசிகலா எழுப்பிய சலசலப்புகள் செல்லாது கட்சி முழுமையும் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று இ.பி.எஸ் மெசேஜ் சொல்லியிருக்கிறார்.
சசிகலாவை வீழ்த்த பயன்படுத்திய இதே ஆயுதத்தைதான் இ.பி.எஸ் கட்சியில் வேறு ஒருவருக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிகின்றனர். இ.பி.எஸ் ஒரு போதும் ஓ.பி.எஸ்-ஐ முழுவதுமாக பகைத்துக்கொள்ள மாட்டார். ஆனால், அவரை கட்சியில் வைத்துக்கொண்டே கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவார் என்கிறார்கள்.
இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் அனேகமாக மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அல்லது அடுத்து 2025 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக இ.பி.எஸ் மாறுவார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். சசிகலாவுக்கு எதிராக அதிமுக மாவட்ட நிர்வாகங்களை தீர்மானம் நிறைவேற்ற வைப்பதைப் போல, கட்சியில் ஒற்றைத் தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வைக்க முடியும். அதன் மூலம் பொதுக்கூட்டத்தை கூட்ட வைத்து இ.பி.எஸ் அதிமுகவின் பொதுச் செயலாளராக முடியும். அப்போது, இதுவரை இரட்டைத் தலைமையால் அதிகாரத்தை அனுபவித்து வந்த இரண்டாம் கட்ட தலைவர்களும் இ.பி.எஸ்-ஸின் முடிவை தடுக்க முடியாது என்கிறார்கள். எப்படியோ, சசிகலாவுக்கு பயன்படுத்திய ஆயுதம் அடுத்து ஓ.பி.எஸ்க்குதான். ஆனால், அது அவரை வெளியேற்றுவதற்கு அல்ல என்கிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.