இன்று (டிச 15) நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், மாநில அரசான தி.மு.க.வை கண்டித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அக்கட்சி அவை தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார். மேலும், கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார்.
அதன்படி, பொதுக்குழு தொடங்கிய பின்னர் அண்மையில் காலமான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சி.பி.எம். பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, நடிகர் டெல்லி கணேஷ் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில்,
1. ஃபீஞ்சல் புயலின் போது சரியாக செயல்படவில்லை எனக் குற்றம்சாட்டி தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அதிக வரி விதிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. மேலும், தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை என கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. டங்ஸ்டன் சுரங்கத்தை தொடக்கத்தின் போதே தடுக்க தவறியதாக குற்றம்சாட்டி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
6. மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதை தவிர்த்து ஆங்கிலத்தில் பெயர் வைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
7. ஃபார்முலா 4 பந்தயம், பேனா நினைவு சின்னம் போன்றவைகளுக்காக நிதியை வீணடிப்பதாக கூறி தி.மு.க அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
8. குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தவறியதாகக் கூறியும் தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
9. கோதாவரி - காவிரி, பரம்பிகுளம் - ஆழியாறு, பாண்டியாறு - புன்னம்புழா திட்டங்களை தொடர்வதற்கு தவறியதாக குற்றம்சாட்டி மாநில அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
10. நீட் தேர்வு ரத்து குறித்து தி.மு.க நாடகமாடுவதாகக் கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
11. வாக்காளர் பட்டியலில் நிலவும் குளறுபடிகளை சரி செய்து நியாயமாக தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
12. சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க தி.மு.க அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
13. இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி மாநில அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
14. கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க சட்ட திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
15. தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வை பாரபட்சமின்றி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
16. 2026-ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம் என வலியுறுத்தி அ.தி.மு.க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“