/indian-express-tamil/media/media_files/2025/04/30/YE1Ykz5UrDzlKVSYETSO.jpg)
விஜயகாந்திற்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தி அக்கட்சி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் தே.மு.தி.க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று (ஏப்ரல் 30) நடத்தப்பட்டது. இதில் கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மறைந்த போப் பிரான்சிஸ் மற்றும் அனைத்து மாவட்டத்திலும் கட்சிக்காக பணியாற்றி மறைந்த நிர்வாகிகளுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க எல்லைகளை பலப்படுத்த வேண்டும் எனவும், சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், நடிகரும், தே.மு.தி.க நிறுவனருமான விஜயகாந்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தவிர, விஜயகாந்திற்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்றும், சென்னை 100 அடி சாலைக்கு விஜயகாந்தின் பெயரை சூட்ட வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வக்ஃபு சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களின் சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படாத என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தே.மு.தி.க சார்பில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சாதி வெறி தூண்டுதல், பழிவாங்கும் உணர்வு மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் நிலை மாணவர்களிடையே இருப்பதால், அவர்களுக்கு 'நல் ஒழுக்கம்' பாடப்பிரிவினை முறையாக செயல்படுத்தி அறிவுரை வழங்க வேண்டும் எனக் கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் நாள்தோறும் நடக்கும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்கு அடிப்படை காரணமாக இருக்கும் டாஸ்மாக் மதுபான விற்பனையை படிப்படியாக குறைத்து, கஞ்சா மற்றும் கள்ளசாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நெசவாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு, மின்சாரம் மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, ஜி.எஸ்.டி வரியை குறைத்து, நெசவாளர்களின் கூலியை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகள் மீது தனி கவனம் செலுத்தி, இனி அங்கு விபத்து ஏற்படாதவாறு உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று தே.மு.தி.க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.