தி.மு.க செயற்குழு கூட்டத்தில் பா.ஜ.க, அ.தி.மு.க-விற்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலின் தலைமையில், அக்கட்சி செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில், கட்சியின் நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 850-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில், அம்பேத்கரை அவதூறாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல், புயல் வெள்ள நிவாரணமாக ரூ.2,000 கோடி நிதி வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, உரிய நிதியை வழங்காமல் வஞ்சிப்பதாக மத்திய அரசுக்கு செயற்குழு சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஃபீஞ்சல் புயலின் போது சிறப்பாக செயல்பட்டதாக தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ஆதரித்த அ.தி.மு.க-விற்கு, செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க-வும் கபட நாடகம் போடுவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
குலத்தொழிலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கைவினை கலைஞர்களை ஊக்குவிக்க புதிய திட்டத்தை செயல்படுத்தும் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டுக்கு உரிய கல்வி நிதியை வழங்காமல் மத்திய அரசு திட்டமிட்டு வஞ்சிப்பதாக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்ட துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“