செங்கல்பட்டு மாவட்டம், திருவிடந்தையில் பா.ம.க சார்பில் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு நடத்தப்பட்டது. இதில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், அவர்களது குடும்பத்தினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் ஏராளமான பா.ம.க தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த மாநாட்டின் போது இடஒதுக்கீடு தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி,
1. தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க மாநில அரசின் சார்பில் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. மேலும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை போராடி பெற்றுக் கொடுத்ததாகக் கூறி கட்சி நிறுவனர் ராமதாஸுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையிட்ட பிரதமர் மோடிக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
3. இது மட்டுமின்றி, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உடனடியாக உள்இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டின் அளவை, அவர்களுடைய மக்கள் தொகைக்கு இணையாக மேலும் 2 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று பா.ம.க சார்பில் தீர்மானம் நிறைவேற்றினர்.
6. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
7. மத்திய அரசின் ஓ.பி.சி இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
8. மேலும், தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.
9. இதேபோல், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களிலும் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
10. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
11. தமிழ்நாட்டில் அனைத்து சமூக மக்களின் வளர்ச்சிக்காக நிதி அதிகாரத்துடன் கூடிய தனித்தனி கார்ப்பரேஷன் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
12. தமிழ்நாட்டில் கல்வி, தனிநபர் வருமானம், மனிதவள குறியீட்டில் பின்தங்கிய நிலையில் உள்ள வட மாவட்டங்களில் முன்னேற்றத்திற்கான சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
13. முழு மது விலக்கை நடைமுறைப்படுத்தவும், போதை பொருள்களை ஒழிக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
14. ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி, இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு வழங்கி தீர்மானம் நிறைவேற்றினர்.