பிரதமர் மோடி ராமேஸ்வரத்திற்கு வருகை தருவதையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, ராமேஸ்வரம் தீவு முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக, அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தவிர மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், ட்ரோன் பறக்க விடுவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 6-ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் நீராடவும், சாமி தரிசனம் மேற்கொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 3:30 மணியில் இருந்து பக்தர்கள் வழக்கம் போல் கோயிலில் தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.