/indian-express-tamil/media/media_files/2025/06/19/murugan-maanadu-2025-06-19-09-30-29.jpg)
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாகனங்களில் வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள்!
மதுரையில் 22-ந் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு நடத்துவதற்கு மதுரை ஐகோர்ட்டு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை அடையாளம் காணும் பொருட்டு ஒவ்வொரு மண்டலத்தில் இருந்து வரும் வாகனத்திற்கும், தனித்தனி வண்ணங்களில் வாகன அனுமதி சீட்டு, அந்தந்த மாவட்ட, மாநகர போலீசார் மூலம் வழங்கப்பட உள்ளது. முறையான ஆவணங்களை சமர்ப்பித்து உரிய வாகன அனுமதி சீட்டினை பெற்று கலந்து கொள்ளலாம்.
வாகன அனுமதி சீட்டுகள் எங்கே கிடைக்கும்? அந்தந்த மாவட்ட/மாநகர காவல்துறையின் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் பெறலாம். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து 24 மணி நேரத்திற்குள் சீட்டை பெற வேண்டும்.
மாநாட்டில் பங்கேற்பவர்கள் அந்தந்த துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் விண்ணப்பித்து, வாகன அனுமதி சீட்டை பெறவேண்டும். தெற்கு மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு பச்சை நிற அனுமதி சீட்டும், வடக்கு மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ஆவடி, தாம்பரம், சென்னையிலிருந்து வரும் வாகனங்களுக்கு வெள்ளை நிற அனுமதி சீட்டும் வழங்கப்பட உள்ளன.
மத்திய மாவட்டங்களான திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சியில் இருந்து வரும் வாகனங்களுக்கு நீல நிற அனுமதி சீட்டும், மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, சேலம், திருப்பூரில் இருந்து வரும் வாகனங்களுக்கு மஞ்சள் நிற அனுமதி சீட்டும், பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு சிவப்பு நிற அனுமதி சீட்டும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் வாகனங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்ட வழியாகவே மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்து, மாநாடு முடிந்த பிறகு அதே வழியிலேயே திரும்பிச்செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
என்னென்ன வழித் தடங்கள்: தென் மாவட்டங்கள் (மதுரை, சிவகங்கை, நெல்லை, குமரி): திருமங்கலம், கப்பலூர், சிந்தாமணி சுங்கச்சாவடி, வேலம்மாள் மருத்துவமனை, விரகனூர் சந்திப்பு வழியாக வரவேண்டும். மேற்கு மாவட்டங்கள் (கோவை, தேனி): சமயநல்லூர் பைபாஸ், புதுக்கோட்டை சந்திப்பு, கூத்தியார்குண்டு, வலையங்குளம் வழியாக வரவேண்டும். வடக்கு மாவட்டங்கள் (சென்னை, ஆவடி): திருப்புவனம், மேலூர், நத்தம், பாண்டிகோவில் வழியாக வரவேண்டும். ராமநாதபுரம் மாவட்டம்: பார்த்திபனூர், மானாமதுரை, சிலைமான், விரகனூர் சந்திப்பு வழியாக. சிவகங்கை மாவட்டம்: பூவந்தி, வரிச்சியூர், சிவகங்கை ரோடு சந்திப்பு வழியாக வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
முக்கியக் குறிப்பு: அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள் மாநாடு நடைபெறும் பகுதிக்குள் அனுமதிக்கப்படமாட்டாது. மாநாட்டுக்காக வந்த வாகனங்கள், திரும்பவும் அந்த வழித்தடங்களிலேயே மாநிலங்களுக்குத் திரும்ப வேண்டும். பாதுகாப்பு, ஒழுங்கு, மற்றும் வழிசெலுத்தலுக்காக காவல்துறையின் ஆலோசனைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.