மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த நல்லம நாயுடு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த நவம்பர் 16ஆம் தேதியன்று உயிரிழந்தார். இவரது உடல் தேனி மாவட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அவரது வீட்டில் தற்போது நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்த அவரது மகன் சரவணன் மற்றும் உறவினர்கள் ஆகியோர், இறுதி சடங்கில் மீதமுள்ள நிகழ்வுகளுக்காக தேனியிலே தங்கி இருந்துள்ளனர்.
சரவணனின் உறவினர் சென்னை வீட்டை சுத்தம் செய்ய சென்றிருக்கிறார். அப்போது வீட்டின் கதவுகளில் இருந்த பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து சரவணனுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
உடனடியாக வீட்டில் உள்ள பொருள்களை செக் செய்யுமாறு உறவினர்களுக்கு தெரிவித்துள்ளார். சரவணன் வீடியோ காலில் இருந்தப்படியே வீட்டை பார்வையிட்டுள்ளார்.
அப்போது, வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த ஏழு சவரன் தங்க நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது.
உடனடியாக இது குறித்து பெரவள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், " கொள்ளையடித்த நபரை கண்டறிய, அருகிலுள்ள வீடுகளின் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்த தேதி தெரியவில்லை. அதன் காரணமாக, நவம்பர் 16 ஆம் தேதி முதல் அனைத்து தரவுகளையும் ஆய்வு செய்துவருகிறோம்" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil