ஓய்வுபெற்ற டி.ஜி.பி ஜாஃபர் சேட் மனைவி பர்வீன் ஜாஃபர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்காசங்கர் மற்றும் லேண்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் உதயகுமாருக்கு சொந்தமான ரூ.14.23 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக வீடு ஒதுக்கீடு செய்த விவகாரத்தில், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஜாஃபர் சேட்டின் மனைவி பர்வீன் ஜாஃபர் மற்றும் லேண்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளரும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்காசங்கர் ஆகியோரின் ரூ.14.23 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
கடந்த 2006-2011 திமுக ஆட்சியின் போது, வீட்டு வசதி வாரியத்தில் நில ஒதுக்கீடு பெற்று அதில் வீடு கட்டி விற்பனை செய்து சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ஜாஃபர் சேட் மீது வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை இயக்குனரகம் விசாரித்து வருகிறது.
திமுகவின் 2006 – 11 ஆட்சிக்காலத்தில், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு ஜாஃபர் சேட் மிகவும் நெருக்கமான ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தார். 1989 பேட்ச் அதிகாரியான ஜாஃபர் சேட் தமிழக காவல்துறையில் உளவுத்துறை ஐ.ஜி., சி.பி.சி.ஐ.டி டிஜிபி, என பல உயர் பதவிகளை வகித்தவர்.
கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் ஜாஃபர் சேட் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமிற்கு மாற்றப்பட்டார்.
ஜாஃபர் சேட் தனது மனைவி சமூக சேவகர் எனக் கூறி 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியத்தில் நில ஒதுக்கீடு பெற்றிருந்தார்.
பெசன்ட் நகர் கோட்டம், திருவான்மியூர் புறநகர் திட்டத்தில் இந்த நில ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனிடையே, அங்கு வர்த்தக நோக்கில் அடுக்குமாடு குடியிருப்பு கட்டி அதன் மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்ததாக ஜாஃபர் சேட் மீது 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
ஐ.பி.எஸ். அதிகாரியான தன் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழுப்புத் துறை மத்திய அரசின் அனுமதி பெறவில்லை என்று கூறி ஜாஃபர் சேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, அமலாக்கத்துறை ஜாஃபர் சேட் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி லஞ்ச ஒழிப்புத்துறைத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் 2020-ம் ஆண்டு ஜாஃபர் சேட் மீதான வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்தது. அமலாக்கத்துறை சம்மனை ஏற்று கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு ஆஜரான ஜாஃபர் சேட்டிடம் 4 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தியது.
இதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து அப்போது வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தியது.
தற்போது ஜாஃபர் சேட்டின் மனைவி பர்வீன் ஜாஃபர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்காசங்கர், லேண்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் உதயகுமார் ஆகியோருக்கு சொந்தமான ரூ.14.23 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“