ஜார்கண்ட் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கற்பக விநாயகத்துக்கு சென்னை தனியார் விடுதியில் பாராட்டு விழாவில், பேசிய அவர், சிவாஜி கணேசன் போல நடிகராக விரும்பிய தான் நீதிபதி ஆனதற்கு எம்.ஜி.ஆர் தான் காரணம் என்று கூறினார்.
ஜார்கண்ட் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கற்பக விநாயகம் சட்டப் பணியில் 50 ஆண்டுகள் சேவையாற்றியதற்காக சென்னையில் தனியார் விடுதியில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், பணி ஓய்வுபெற்ற பிறகும் இன்னும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைமுறைகளை கவனிப்பவர் கற்பக விநாயகம் என்று பாராட்டினார்.
இதையடுத்து, பாராட்டு விழாவில் ஏற்புரையாற்றிய ஓய்வுபெற்ற நீதிபதி கற்பக விநாயகம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக 74 நாட்கள் மட்டுமே பணியாற்றிய நீதிபதி யு.யு. லலித், குறுகிய காலத்தில் நீதித்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என புகழ்ந்தார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி கற்பக விநாயகம், “நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல் நடிகராக விரும்பிய தன்னை அரசு வழக்கறிஞராக நியமித்ததன் மூலம் நீதிபதியாகி, தலைமை நீதிபதியாக உயர காரணம் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.தான் என்று கூறினார்.
நீதிபதி கற்பக விநாயகம் பேசியதாவது: “
என் முன்னேற்றத்துக்கு, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., நீதிபதி பதவிக்கு என்னை பரிந்துரை செய்த ஓய்வுபெற்ற நீதிபதி டி.எஸ். அருணாச்சலம், என் மனைவி ஆகிய மூவரும் முக்கியமானவர்கள்.
எம்.ஜி.ஆருக்காக நான் சிறை சென்றிருக்கிறேன். அவருடன்தான் இருப்பேன். அப்போது எம்.எல்.ஏ-வாக வேண்டும்; சினிமா நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டேன். நாடக நடிகராக இருந்த எனக்கு, சினிமா வாய்ப்பு வந்தபோது, கதை கேட்ட பின் நடிக்க ஒப்புக்கொள் என எம்.ஜி.ஆர் கூறினார்.
ஏ.வி.எம் நிறுவனத்தில் இருந்து எனக்கு வாய்ப்பு வந்தது. அந்த கதையைக் கேட்டு எம்.ஜி.ஆரிடம் சொன்னபோது நடிக்காதே வேண்டாம் என்றார். பல வாய்ப்புகள் வந்தும் என்னை நடிக்க அனுமதிக்கவில்லை.
எம்.ஜி.ஆர் முதல்வரானதும் என்னை அழைத்து அரசு குற்றவியல் வழக்கறிஞராக பதவி ஏற்க சொன்னார்.
நான் யோசித்தபோது, ‘என் தந்தை இலங்கையில் மாஜிஸ்திரேட்டாக இருந்தவர். அவரது மகனான நான், வெறும் மூன்றாம் வகுப்புதான் படித்துள்ளேன். எனக்கு என் தந்தை செய்ய நினைத்ததை உனக்கு நான் செய்ய விரும்புகிறேன்’ என என்னிடம் கூறினார். எம்.ஜி.ஆர் இதை சொன்னதும் அரசு வழக்கறிஞராக பதவி ஏற்றேன். ஏழரை ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போது ஊதியம் குறைவு என்பதால் அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தேன்.
இதை எம்.ஜி.ஆரிடம் கூறியபோது, அவருக்கு கோபம் வந்தது. ஆனால், அவர் மறைந்த பிறகு, நான் என்னவாக வேண்டும் என்று அவர் நினைத்தாரோ, அது போல நீதிபதியானேன். ஒருவேளை நான் நடிகராகி இருந்தால், என் வாழ்க்கையை தொலைத்திருப்பேன். எம்.எல்.ஏ-வாகி இருந்தால், அமைச்சராகி பின் ஜெயிலுக்கு போய் இருப்பேன். நான் நீதிபதியானேன். திருப்தியான வாழ்க்கையை ஒழுக்கத்துடன் வாழ்ந்து வருகிறேன். இதற்கு காரணம் எம்.ஜி.ஆர்தான்” என்று உருக்கமாகப் பேசினார்.
மேலும், வாழ்நாளில் பிறருக்கு உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர்மோகன், பரதச்சக்கரவர்த்தி, மஞ்சுளா, புகழேந்தி, ஜெயச்சந்திரன், சுரேஷ்குமார், எஸ்.எஸ்.சுந்தர் தற்போதைய அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் விடுதலை ஆகியோர் ஓய்வுபெற்ற நீதிபதி கற்பகவிநாயகத்தை பாராட்டி பேசினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”