புதிய தலைமை செயலகம் முறைகேடு வழக்கு: 3 ஆண்டுகள் செயல்படாத ரகுபதி கமிஷனுக்கு 2 கோடி ரூபாய் செலவு!

நீதிபதி ஏற்க மறுத்ததால் இருவருக்கும் இடையே காரசார வாதம் நடைபெற்றது

3 ஆண்டுகள் செயல்படாத ரகுபதி கமிஷனுக்கு 2 கோடி ரூபாய் ஏன் வீணாக செலவு செய்யப்பட்டது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து, இது குறித்து விசாரணை நடத்த கடந்த 2012 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையத்தை எதிர்த்தும் ஆணையம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரியும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 2015 ஆம் ஆண்டு ரகுபதி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது 3 ஆண்டுகள் செயல்படாமல் இருந்த ஆணையத்திற்கு செய்யப்பட்ட செலவு எவ்வளவு, இதுவரை எவ்வளவு ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் இது வரை 5 ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

1.இளவரசன் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு ஆணையம்

2.ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் ஆணையம்

3. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, ஆணையம்

4.தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி
அருணா ஜெகதீஷ்வரன் ஆணையம்

5. தலைமை செயலக முறைகேடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதில் நீதிபதி சிங்காரவேலு ஆணையம் விசாரணையை முடித்து இம்மாத இறுதியில் அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும், சிங்காரவேலு ஆணையத்திற்கு இதுவரை 2 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும்,
ராஜேஷ்வரன் ஆணையத்திற்கு 1 கோடியே 47 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 32 லட்சம் ரூபாய், அருணா ஜெகதீஷ்வரன் ஆணையத்திற்கு 27 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

ரகுபதி ஆணையத்தை பொறுத்தவரை இதுவரை 4 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றம் தடை விதித்திருந்த மூன்றாண்டு காலத்தில் 2 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இது வீண் செலவு இல்லையா? என கேள்வி எழுப்பினார். மேலும் ஆணையத்தின் செயல்படுகளை அரசு கண்காணித்து இருக்க வேண்டும் என்றும், இது போன்ற செயல்களை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க முடியாது என தெரிவித்தார்.

பின்னர் பிரதான வழக்கில் வாதத்தை தொடங்கும் படி கருணாநிதி தரப்பிற்கு நீதிபதி அழைப்பு விடுத்தார். ஆனால் இந்த வழக்கை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என கருணாநிதி தரப்பு வழக்கறிஞர் வில்சன் தெரிவித்ததை நீதிபதி ஏற்க மறுத்ததால் இருவருக்கும் இடையே காரசார வாதம் நடைபெற்றது.

பின்னர், ரகுபதி ஆணையத்தின் வழக்கறிஞர் வாதத்திற்காக வழக்கு விசாரணையை நீதிபதி மீண்டும் நாளை ஒத்திவைத்தார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Retired justice raghupathy investigation commission case in chennai high court

Next Story
சிலைக்கடத்தல் ஆபத்து உள்ள கோவில்களின் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X