ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த நளினி, ஊடகங்களிடம் பொய்யான தகல்களைக் கூறுகிறார். அவர் தவறை உணர்ந்து இனியாவது திருந்தி வாழ வேண்டும் என ராஜீவ் காந்தி படுகொலையில் காயம் அடைந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி அனுசுயா டைஸி ஆவேசமாகக் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி உள்பட 6 பேர் உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்தது. விடுதலையான நளினி ஊடகங்களிடம் தனது சிறை வாழ்க்கை குறித்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையின்போது உடனிருந்து படுகாயமடைந்த ஏ.டி.எஸ்.பி-யாக இருந்து ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி அனுசுயா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அனுசுயா டைஸி கூறியதாவது: “நான் ராஜீவ் காந்தி படுகொலையின்போது பாதுகாப்புப் பணியில் இருந்தேன். அந்த குண்டுவெடிப்பில் மோசமாகக் காயமடைந்தேன். இரண்டு விரல்கள் போனது. உடல் முழுவதும் குண்டுகளால் துளைக்கப்பட்டு, இன்றும் என்னுடைய மார்பில் 5 குண்டுகள் இருக்கின்றன. கண்களிலும் குண்டுகள் இருக்கின்றன. உடலின் இடது பகுதி முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. நான் இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கண்ணால் கண்ட சாட்சி.
இதில் நளினி முதல் குற்றவாளி. அவருடன் சேர்த்து 25 பேர் சிறப்பு நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை பெற்றவர்கள். பிறகு அவர்கள் மேல்முறையீடு செய்து தண்டனைக்காலம் மாற்றப்பட்டது. குற்றவாளிகளுக்குச் சாதகமாக இருக்கக்கூடிய சட்டத்தின் மூலம் அவர்கள் உச்ச நீதிமன்றத்தால் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். நளினி ஊடகத்துக்கு நிறைய பொய்யான தகவல்களைக் கொடுக்கிறார்.
குறிப்பாக என்னை சம்பவத்தின்போது பார்க்கவில்லை என்று கூறுகிறார். போலீஸ் உதவியுடன்தான் நான் அவரை அடையாளம் காண்பித்தேன் என்கிறார். நளினி இப்படி கூறுவது பொய். சிறப்பு நீதிமன்றம் என்னுடைய சாட்சியை வைத்து மட்டுமே அவர்களுக்குத் தண்டனை கொடுக்கவில்லை. 1,444 சாட்சிகளை விசாரித்துதான் தண்டனை கொடுத்தார்கள். இந்திரா காந்தி சிலை பக்கத்தில்தான் நான் நின்றேன். பிரச்னை நடந்த இடத்தில் நான் இல்லை என்று சொல்கிறார்.
இவருக்கு இரவு 10:20 மணிக்கு இந்திரா காந்தி சிலை அருகில் என்ன வேலை? பெண் விடுதலை புலி சுபாவுடன் நளினிக்கு என்ன வேலை? நான் பணியில் இருக்கும்போது நளினியும், சுபாவும் விலை உயர்ந்த மைசூர் சில்க் புடவையில் வந்தனர். அப்போது நான் அவர்களிடம் அமரும்படி கூறினேன். அதற்கு அவர்கள் மேடையையும், என்னையும் பார்த்து ஏளனமாக சிரித்துவிட்டுச் சென்றார்கள்.
ஆனால், நளினி நான் அங்கு இல்லை என்று சொல்கிறார். பிறகு ஏன் முருகனை திருமணம் செய்ய வேண்டும். இந்த திருமணத்திற்கான பதிவு ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்பு செய்யப்பட்டதா?, பின்பு செய்யப்பட்டதா? ஒருவேளை படுகொலைக்கு முன்பு செய்யப்பட்டிருந்தால், இவர்தான் விடுதலைப் புலிகளை அழைத்து வந்திருக்க வேண்டும்.
நளினி உதவி இல்லையென்றால் நாட்டின் பிரதமர், போலீஸார், பொதுமக்கள், அரசியல்வாதிகள் இறந்திருக்கமாட்டார்கள். இன்று பூ வைத்துக்கொண்டு நளினி வருகிறார். ஆனால், எத்தனை பெண்களின் தாலியை அறுத்திருக்கிறார்? காந்தி குடும்பம் ஒன்றுதான் நாட்டுக்காக உயிரைக் கொடுக்கிறது. நமது சட்டம் குற்றவாளிகளுக்குச் சாதகமாக இருக்கிறது.
நளினி நான் உனக்கு ஒன்று சொல்கிறேன். நளினி நீ ஒரு துரோகி, நமது நாட்டுப் பிரதமரை படுகொலை செய்த கொலைகாரி நீ. பொய் பேசிக்கொண்டு திரியாதே. நீ இன்றைகாவது திருந்து” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“